வேலூரில் விமான நிலையம்: முதல்கட்ட தொழில்நுட்ப ஆய்வு தொடக்கம்

வேலூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முதல்கட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், ஓடுதளம் அமைப்பதற்கு
Updated on
1 min read

வேலூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முதல்கட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், ஓடுதளம் அமைப்பதற்கு தகுதியான இடம், விமான நிலைய முனையம், கார் நிறுத்துமிடம், இடையூறுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் "உதான்' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பயனற்ற  நிலையிலுள்ள விமான நிலையங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 25 இடங்களில் சிறிய ரக விமான நிலையங்களும், 31 இடங்களில் ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்பட உள்ளது.
இதையொட்டி, தமிழகத்தில் வேலூர், நெய்வேலி, ஒசூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, வேலூர் அப்துல்லாபுரத்தில் ஏற்கெனவே 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கூடுதலாக 50 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தேவையான நிலத்தைக் கையகப்படுத்தி அளிப்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் தலைமையில் அதிகாரிகள் நில அளவைப் பணியில் ஈடுபட்டனர். 
இதனிடையே, வேலூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முதல்கட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. விமான சேவை தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த ஆய்வில், ஓடுதளம் அமைப்பதற்கான தகுதியான இடம், விமான நிலைய முனையம், கார் நிறுத்துமிடம், செல்லிடப்பேசி கோபுரங்கள், இதர கட்டட இடையூறுகள், சிக்னல் கட்டுப்பாட்டு அறை, விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆய்வு தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் என்றும், மேலும் பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகே விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com