அப்துல்லாபுரம் ஊராட்சியில் வணிக வளாகம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வீடுகள் கட்ட முயற்சித்து வருவதாக அந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நெமிலியை அடுத்த தக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனு விவரம்:
தக்கூர் பகுதியிலுள்ள ஏரியை குடிமராமத்து திட்டத்தில் தூர்வார மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே இரு முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஏரியை தூர்வாரினால் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஏரியை தூர்வார அனுமதி வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
வேலூர் அப்துல்லாபுரம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், இந்திரா நகர் கோயில் அருகே ஊராட்சி வணிக வளாகம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 சென்ட் நிலத்தை தனிநபர் போலி பட்டா தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அந்த இடத்தை வீட்டுமனைகளாக விற்பனை செய்திட முயற்சி நடைபெறுகிறது. அங்கு தற்போது வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதனருகே பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தையும் ஆக்கிரமித்து போலி பட்டா தயாரித்து வீடுகள் கட முயற்சிக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி தாராபடவேடு கன்சலாவூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், கன்சலாவூர் பகுதியில் 43 பேர் வீடின்றி தவித்து வருகின்றனர். 25 ஆண்டுகளாக வசித்து வரும் இவர்கள் வீடுகள் கட்டித்தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளனர். எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு, உதவித் தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 400 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






