சீரமைக்கப்படுமா செருவங்கி ஏரி ? 

மோர்தானா அணையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் செருவங்கி ஏரி சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
2 min read

மோர்தானா அணையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் செருவங்கி ஏரி சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், ஒன்றியத்திலுள்ள பெரும்பகுதி நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் அமைந்துள்ளது செருவங்கி ஏரி. 
இந்த ஏரிக்கு மோர்தானா அணை நீர் வந்து கொண்டிக்கும் நிலையில், ஏரியை பொதுப்பணித் துறையினர் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 
மோர்தானா அணையிலிருந்து கடந்த சனிக்கிழமை முதல் வினாடிக்கு 240 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 இந்த தண்ணீர் வலது, இடது புறக் கால்வாய்களில் தலா 70 கன அடி வீதமும், கௌன்டன்யா ஆற்று வழியாக 100 கனஅடி வீதமும் செல்கிறது. ஆற்று வழியாக செல்லும் தண்ணீர் பெரும்பாடி அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து செருவங்கி ஏரிக்குச் செல்கிறது. 
சனிக்கிழமை திறக்கப்பட்ட அணை நீர் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும்பாடி தடுப்பணைக்கு வந்தது. தடுப்பணையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் தூர் வாரப்படாததால், தண்ணீர் ஆற்று வழியாக வீணாகச் செல்லும் நிலை ஏற்பட்டது. 
இதையடுத்து, திங்கள்கிழமை காலை பொதுப் பணித்துறையினர் பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு வந்து தடுப்பணையிலிருந்து ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயை தூரெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட செருவங்கி ஏரியின் மேற்குப் பகுதியில், லிங்குன்றத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 ஏக்கர் அளவுக்கு ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, பருத்தி, மாட்டுத் தீவனங்கள், தோட்டப் பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
 இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கடந்த தொடர் மழையின்போது, ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஏரி நிரம்பினால், ஏரி நிலத்தை ஆக்கிரமித்து  நடப்பட்டுள்ள பயிர்கள் நாசம் அடையும் என்பதால், அவர்கள் ஏரியை நிரம்பவிடாமல், ஏரிக்கு வரும் தண்ணீரை மதகுகள் வழியாக உடனுக்குடன் வெளியேற்றினர். அதேபோல், ஏரியின் கிழக்குப் பகுதியில் தங்களது நிலத்தில் வீட்டு மனைகளை அமைத்துள்ளவர்கள், ஏரி நிரம்பினால் தங்களது வீட்டு மனைகள் விற்காது என்ற காரணத்தால், மேல்பட்டி சாலை வழியாக உள்ள ஏரியின் 3 மதகுகளையும் திறந்து விட்டு தண்ணீரை வெளியேற்றினர். 
இதனால் தற்போது 3 மதகுகளும் திறந்த நிலையிலேயே உள்ளன என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஏரிக்கு வரும் தண்ணீரை முழுவதுமாக ஏரியிலேயே தொடர்ந்து தேக்கி வைத்தாலே, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும். எனவே, ஏரி மதகுகளை பொதுப் பணித் துறையினர் முறையாக சீரமைத்து, தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 
செருவங்கி ஏரி நிரம்பினால்தான், செட்டிகுப்பம் ஏரி, தட்டாங்குட்டை ஏரி ஆகியவற்றுக்கு தண்ணீர் செல்லும். மேலும் அப்பகுதி நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். 
இதனால் செருவங்கி ஏரிக்கு வரும் தண்ணீரை முழுவதுமாக ஏரியிலேயே தேக்கி வைக்கும் வகையில் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com