வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான தென் பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவிப்புகள் வந்த நிலையில், மீண்டும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பது விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வழக்கம்போல் வெளியிடப்படும் அறிவிப்பு நாடகமாகவும் இருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திரத்தில் 33 கிலோ மீட்டரும் கடந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.
இம்மாநிலத்தில்தான் அதிகப்படியாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பெரும்பகுதி வேலூர் மாவட்டத்தை அரவணைத்துச் செல்லும் பாலாற்றுக்கு 7 துணை ஆறுகள் உள்ளன.
இதேபோல், கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, தமிழகத்தில் சுமார் 320 கி.மீ. தூரம் பாய்ந்தோடுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொடியாளம் தடுப்பணையில் தமிழகத்துக்குள் நுழையும் தென்பெண்ணையாறு அதைத் தாண்டி ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை அடைகிறது.
பின்னர், அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. டெல்டா மாவட்டங்களை காவிரி பசுமையாக்குவதுபோல் பாலாற்றின் மூலமாக வடதமிழகத்தின் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்களும், தென்பெண்ணையாறு மூலமாக சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
அதேசமயம், கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும், ஆந்திரத்தில் பாலாறு கடந்து வரும் பாதையில் அம்மாநில அரசு சிறியதும், பெரியதுமாக 28 தடுப்பணைகளைக் கட்டியுள்ளதாலும் தமிழகத்தில் பாலாறு வறண்டு பாழ்பட்டுள்ளது.
மேலும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசும் தொடர்ந்து தடுப்பணைகள் கட்ட முயற்சித்து வருகின்றன.
இதனிடையே, நீரிண்றி வறண்டு கிடக்கும் பாலாற்று பாசன பகுதிகளின் நிலத்தடி நீரை செறிவூட்டவும், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் தென் பெண்ணை ஆற்றின் வெள்ள உபரிநீரை நெடுங்கல் தடுப்பணையிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டி கல்லாறு வழியாக வெல்லக்கல்நத்தம் பகுதியில் இணைக்கும் வகையில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.
இத்திட்டத்துக்கு கடந்த 2008-2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலேயே மத்திய நீர்வள ஆதார அமைப்பு ரூ. 250 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து, அதை மாநில நிதியிலேயே செயல்படுத்த வலியுறுத்தியது.
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், 2011-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மாநிலத்துக்குள் ஓடும் நதிகள் மாநில நிதியிலேயே இணைக்கப்படும் எனும் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதையடுத்து, இத்திட்டம் செயல்படுத்தும் வழித்தடங்கள் குறித்து மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர் சித்திக் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
ஆனால், திட்டத்துக்கான வழித்தடம் குறித்த பிரச்னை உயர் நீதிமன்றம் வரை சென்றதால் மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்துக்காக மீண்டும் திட்ட மதிப்பீடு தயார் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு விவசாயிகள் அதிர்ச்சி கலந்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய நீர்வள ஆதார அமைப்பு ரூ. 648 கோடியில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், அதன்பிறகும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் தொடங்காமல் இருப்பது மீண்டும் விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வேலூர் மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாலாறு இணைப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளர் ச.ந.ச.மார்த்தாண்டன் கூறியதாவது:
தேர்தல் வரும் சமயங்களில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாவதும், அதன்பிறகு திட்டம் கிடப்பில் போடப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. அதேபோல், தற்போது ரூ. 648 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுவதும் நம்பத்தகுந்ததாக இல்லை.
மேலும், இந்த ஒப்புதல் தொடர்பாக தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளிடமே தெளிவான தகவலும் இல்லை. இதன்மூலம், இத்திட்டத்தை மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி விடப்பட்ட வெற்று அறிவிப்பாகவே கருதுகிறோம். மத்திய அரசு உடனடியாக தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கான முன்முயற்சிகளை மாநில அரசு தீவிரப்படுத்திடவும் வேண்டும் என்றார் அவர்.
பாலாறு பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது:
ஏற்கெனவே மணல் குவாரி என்ற பெயரில் பாலாற்றின் 20 முதல் 30 அடி வரை பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்கள் மேடாகிவிட்டதால், ஆற்றில் வெள்ளம் வந்தாலும் ஏரிகளுக்கு செல்ல வாய்ப்பு குறைந்துவிட்டது.
இதையடுத்து, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் தடுப்பணையில் இருந்து கல்லாறு வழியாக பாலாற்றுக்கு 54.1 கி.மீ. தூரம் கால்வாய் அமைத்து தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை ரூ. 648 கோடியில் செயல்படுத்திட மத்திய நீர்வள ஆதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் தாக்கல் ஆய்வுப் பணிக்கு வாப்காஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு ஆய்வறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இதையடுத்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


