வறட்சியால் தென்னை விவசாயிகளுக்கு ரூ.12 கோடி இழப்பு

வறட்சி காரணமாக ஆம்பூர் பகுதியில் தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன. ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்
Updated on
3 min read

வறட்சி காரணமாக ஆம்பூர் பகுதியில் தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன. ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிர்கள் அழிந்து போயுள்ளதால் விவசாயிகளுக்கு ரூ.12 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் பகுதியில் பேர்ணாம்பட்டு, மாதனூர் ஒன்றியங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாய நிலங்கள் பாலாற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளன. இந்த விவசாய நிலங்களில் நன்செய், புன்செய் பயிர்களுக்கு அடுத்தபடியாக பெரும்பாலான விவசாயிகள் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார்கள். பாலாற்றின் கரையில் தென்னந்தோப்புகள் உருவாக காரணம் கடந்த காலங்களில் வேலூர் மாவட்டத்தின் ஜீவாதார நதியான பாலாற்றில் ஆண்டின் பெரும்பாலான நாள்களும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். 
இதனால் பாலாற்றில் இருந்து கால்வாய்கள் அமைத்து தென்னந்தோப்புகளில் நீர் எடுத்துச் சென்று பயிரிட்டு வந்தனர். பாலாற்றின் நீர் நிலத்தடி நீராக பயன்படுத்தப்பட்டு தென்னந்தோப்புகள் அளவுக்கு அதிகமாக இப்பகுதியில் காணப்பட்டன.
தென்னை மர விவசாயம் என்பது கடந்த பல நூறு ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்து வருகிறது. மற்ற விவசாய விளைபொருள்களைப் பயிரிடவும், உற்பத்தி செய்யவும் அதைக் கொண்டுபோய் சந்தையில் விற்கவும் அதிகமான வேலைச் சுமைகள் உள்ளன. ஆனால், தென்னை மரம் வளர்ப்பை பொருத்தவரை தென்னங்கன்றுகளை வாங்கி வந்து தங்களது விவசாய நிலங்களில் வைத்து, சுமார் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நல்ல முறையில் நீர் பாய்ச்சி வளர்த்தாலே போதும். தென்னை பலன் தர ஆரம்பித்து விடும்.
தென்னை பயிரிட வேலையாட்களோ, அதிகமான உரங்கள் இடவோ தேவையில்லை.  அதனால் பெரும்பாலான விவசாயிகள் இப்பகுதியில் தென்னையைப் பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள். பல வெளி மாநிலங்களுக்கு வேலூர் மாவட்டத்திலிருந்து விற்பனைக்காக லாரிகளில் தேங்காய் அனுப்பி வைக்கப்பட்ட காலம் மாறி,  தேங்காய் வியாபாரம் தற்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.  
வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை பாலாறு, வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தொடங்கி ஆம்பூர், மாதனூர், குடியாத்தம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் பாலாற்றுக் கரையோரப் பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிக எண்ணிக்கையில் காலங்காலமாக வளர்த்து வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால் தென்னை மரங்கள் இப்போது பலன் தருவதை குறைத்துக் கொண்டு விட்டன.
நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் தென்னை மரங்களும் தங்கள் மகசூலை தரத் தவறிவிட்டன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தென்னந்தோப்புகளை அழித்து வீட்டு மனைகளாக மாற்றவும், தொழிற்சாலைகள் அமைக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.  தற்போது தென்னை பயிரிடுவதை விவசாயிகள் மெல்ல கைவிட்டு வருகின்றனர். 
ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. அதில் கடும் வறட்சி காரணமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிர்கள் அழிந்துள்ளன. தொடர்ந்து அழிந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ரூ. 12 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்பூரை அடுத்த காட்டு வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன் (47) கூறியது:
"தென்னையப் பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு' என்று சொல்வார்கள். தென்னை மரத்தின் எல்லா பகுதிகளும் பயன் தரக்கூடியதாக இருக்கும். தென்னை ஓலைகள் வீடு கட்டவும், தென்னை மட்டைகள் அடுப்பெரிக்கவும் பயன்படும். இளநீர் தாகம் தணிக்கப் பயன்படுகிறது. தென்னை ஓலைக் குச்சிகள் துடைப்பமாகவும்,  தேங்காய் பூஜைப் பொருளாகவும், தேங்காய் எண்ணெய் பல உபயோகங்களுக்கும், தென்னை நார் கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. 
இதனால்தான் தென்னந்தோப்புகளை விவசாயிகள் விரும்பி வளர்த்து வந்தனர். ஆனால் வறட்சி காரணமாகவும், நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே போய் விட்டதாலும் இன்று தென்னந்தோப்புகள் அழிந்து பாலைவனமாக காட்சியளிக்கின்றன. 
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விழித்துக்கொண்டு மீண்டும் இப்பகுதியில் தென்னை பயிரிட ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தென்னை பயிருக்காக வெளிமாநிலங்களிடம் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும் என்றார் அவர்.
ராஜக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி நந்தகுமார் (38) கூறியது: பாலாற்றை நம்பி மட்டுமே இப்பகுதியில் தென்னை மரங்களை விவசாயிகள் வளர்த்து வந்தனர். பாலாற்றில் தொடர்ந்து நடந்து வரும் மணல் கொள்ளையால் இன்று நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதுவும் இப்பகுதியில் தென்னந்தோப்புகள் அழிந்து வர ஒரு காரணமாகும்.
மேலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பாலாற்றை ஒட்டிய பகுதிகளில் நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ரெட்டிமாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலாஜி (56) கூறியது:
பாலாற்றுப் படுகை பகுதியில் தென்னந்தோப்புகள் வளர காலங்காலமாக பாலாற்றில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த தண்ணீரே காரணியாக இருந்தது. கடந்த காலங்களில் மணற்பரப்பு நிறைந்து காணப்படும். பாலாற்றில் மூன்று அடி ஆழம் தோன்றினாலே பால் போன்ற தண்ணீர் கிடைத்து வந்தது. அப்போது பாலாற்றில் மணல் குவாரிகள் இல்லை. தென்னை மரங்களைப் பொறுத்த வரை அவற்றின் வேர்கள் சுமார் 5 முதல் 10 அடி ஆழம் வரை பூமியில் உயிரோடு இருக்கும் என்றார் அவர்.
ஆம்பூர் பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. கடும் வறட்சி, மணல் குவாரிகள், பாலாற்றில் நீர் வரத்து இல்லாமல் போனது, உயர் அழுத்த மின்கோபுர பாதைகள் அமைக்கப்பட்டு வருவது போன்ற காரணங்களால் தென்னை பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இந்த மரங்கள் அழிந்து வருகின்றன. 
கடந்த காலங்களில் ஆம்பூர் பகுதிகளில் தென்னை மரங்கள் பசுமை சூழ்ந்து காணப்பட்டதைப் போல் மீண்டும் தழைத்தோங்க வேண்டுமானால் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தென்னை வைத்த நாள் முதல் அது பலன் தரும் ஐந்தாண்டுகள் தொடங்கி 7 ஆண்டு காலம் வரை அதற்கான மருந்து, உரம் போன்றவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். 
தென்னை மரம் வளர்க்கும் விவசாயிகளின் நிலங்களில் அரசே நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்துத் தர வேண்டும். அதற்காக நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழக எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தென்னை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com