வறட்சியால் மா விளைச்சல் கடும் பாதிப்பு: மரங்கள் காய்ந்து கருகின

பருவமழை பொய்த்துப் போனதால் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக நிகழாண்டு மாங்காய் விளைச்சல் கடும் சரிவைச்
வறட்சியால் மா விளைச்சல் கடும் பாதிப்பு: மரங்கள் காய்ந்து கருகின
Updated on
2 min read



பருவமழை பொய்த்துப் போனதால் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக நிகழாண்டு மாங்காய் விளைச்சல் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தவிர, மொத்தமுள்ள மா மரங்களில் 30 சதவீதம் அளவுக்கு காய்ந்து விட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக மா விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் வேலூர் முக்கிய இடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலும், ஆற்காடு, ராணிப் பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் குறைந்த அளவிலும் மா விளைச்சல் நடைபெறுகிறது. இதன்படி, இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாத சீசனில் மட்டும் 20 ஆயிரம் டன் முதல் 25 ஆயிரம் டன் அளவுக்கு மாங்காய் உற்பத்தி செய்யப்படுவதுண்டு.
 பெரும்பாலும் பங்கனப்பள்ளி, பெங்களூரா, நீலம் ரகங்களும், அதைத்தொடர்ந்து சற்று குறைந்த அளவில் காலாபேடு, இமாம்பசந்து, அல்போன்சா, ருமானி ரகங்களும் உற்பத்தியாகின்றன.
 எனினும், இம்மாவட்டத்தில் போதிய மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இல்லாததால் இங்கு விளைச்சலாகும் பெங்களூரா, காலாபேடு, நீலம் ஆகிய ரக மாம்பழங்கள் அருகில் உள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளுக்கே அனுப்பப்படுகின்றன. சீசன் சமயங்களில் அம்மாநில விவசாயிகளுடன் ஏற்படும் போட்டியால் வேலூர் மாவட்டத்திலேயே கூட்டுறவு துறை மூலம் மாம்பழக் கூழ் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும்.
 இதனிடையே, கடந்தாண்டு பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்ததாலும், பாலாறு வறண்டதாலும் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் நிகழாண்டு மா விளைச்சல் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், ஜூன், ஜூலை சீசனில் 5 ஆயிரம் டன் முதல் 10 ஆயிரம் டன் அளவுக்கு மா விளைச்சல் கிடைப்பதே அரிதாகியுள்ளது. அதிலும், மழையின்மையால் அறுவடை செய்யப்படும் மாங்கனிகளில் 70 முதல் 90 சதவீத அளவுக்கு, மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதற்கு உரிய தரத்தில் இல்லாததால், அவற்றை மிகக் குறைந்த விலைக்கு ஊறுகாய் ஆலைகளுக்கே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் வேலூர் மாவட்ட மா விவசாயிகள் நலக்குழுத் தலைவர் கோபாலராஜேந்திரன்.
அவர் மேலும் கூறியது:
 பருவமழை பொய்த்ததால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. இதனால், மா மரங்களைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கியே பயன்படுத்தி வருகின்றனர். 
அதுவும் இயலாதவர்களின் மா மரங்கள் 30 சதவீதம் அளவுக்கு காய்ந்து விட்டன. 
 இதனிடையே, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அறுவை செய்யப்படும் மாங்கனிகளில் சுமார் 75 சதவீதம் அளவுக்கு தரம் குறைந்தவையாக உள்ளன. இதனால், கிலோவுக்கு ரூ. 3 வீதம் ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்ட மா விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும், ஆண்டுக்காண்டு மழைவளம் குறைந்து வருவதைத் தவிர்க்க சூழும் கருமேகங்களைக் குளிர்வித்து செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எல்.சி.மணி கூறியது:
 கடந்தாண்டு அறுவடை நல்ல நிலையில் இருந்தபோதிலும் தமிழக மாங்கனிகளுக்கு சித்தூர் மாவட்ட ஆட்சியர் விதித்த தடையாலும், நிகழாண்டு மழையின்மையால் விளைச்சல் மட்டுமின்றி மா மரங்கள் காய்ந்து விட்டதாலும் வேலூர் மாவட்ட மாங்கனி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளைக் கணக்கெடுத்து அரசு உரிய வறட்சி நிவாரணத்தை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். 
மேலும், சீசனில் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் உள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளுக்கு, மாங்கனிகளை அனுப்ப வேண்டியதைத் தவிர்க்க வேலூர் மாவட்டத்திலேயே கூட்டுறவுத் துறை மூலம் விரைவில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை தொடங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com