வேலூரில் போலி தொலைபேசி அழைப்பு வழங்கும் மையம் கண்டுபிடிப்பு: தலைமறைவான கும்பலுக்கு வலை

வேலூரில் இணையவழி குற்றங்கள் மேற்கொள்ளும் நோக்கத்தில் போலி தொலைபேசி அழைப்பு வழங்கும் மையத்தை நடத்தி வந்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
வேலூரில் போலி தொலைபேசி அழைப்பு வழங்கும் மையம் கண்டுபிடிப்பு
வேலூரில் போலி தொலைபேசி அழைப்பு வழங்கும் மையம் கண்டுபிடிப்பு

வேலூரில் இணையவழி குற்றங்கள் மேற்கொள்ளும் நோக்கத்தில் போலி தொலைபேசி அழைப்பு வழங்கும் மையத்தை நடத்தி வந்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூரில் செயல்பட்டு வந்த போலி தொலைபேசி அழைப்புகள் வழங்கும் சேவை மையத்தை ஒழுங்கமைப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு (ஓசிஐயு) காவலர்கள் கண்டுபிடித்து அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் இணைய வழியில் பணம் மோசடி, தீவிரவாத தொடர்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் பணியில் சென்னையில் ஒழுங்கமைப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு (ஓசிஐயு) ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இணைய வழியாக பணம் மோசடி, தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு ஆதரவாக சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் போலியாக இணைய வழி தொலைபேசி அழைப்புகள் வழங்கும் சேவை மையம் செயல்பட்டு வருவதாக இந்த ஓசிஐயு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஓசிஐயு காவல்துறையினருடன் இணைந்த அந்தந்த மாவட்ட தனிப்படை காவலர்கள், வெள்ளிக்கிழமை சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதன்படி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையில் வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படை காவலர்கள் நீதிமன்ற ஆணை பெற்று வேலூர் சார்பனாமேடு சஞ்சீவிபிள்ளை தெருவில் பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீட்டில் பிகேஎஸ் எக்ஸ்போர்ட், இம்போர்ட் என்ற பெயரில் எவ்வித உரிமமும் இல்லாமல் போலியாக இணைய வழி தொலைபேசி அழைப்புகள் வழங்கும் சேவை மையம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த இடத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணையன் சம்பத் என்பவர் 6 மாதங்களாக வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது. கண்ணையன் சம்பத் தலைமறைவான நிலையில் அங்கிருந்த கணினி, இணையதளத்துக்கான ரௌடர், மோடெம் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை தஞ்சாவூரில் தனிப்படை காவலர்கள் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான கும்பல் தலைவரான கண்ணையன் சம்பத்தை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, காவலர்துறையினர் கூறுகையில், சார்பனாமேடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போலியாக இணைய வழி சேவை மையத்தின் கட்டட உரிமையாளர் பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிராஜ் என்பவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிமுகம் செய்து கொண்டு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், கண்ணையன் சம்பத் தன்னை சிராஜ் என பெயர் மாற்றம் செய்து வீடு வாடகை எடுத்துள்ளாரா என்பது தெரியவில்லை.

எனினும், அதன்பிறகு அங்கு யாரும் வந்து செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. அங்கு நிறுவப்பட்டிருந்த கணினி உள்ளிட்ட பொருட்கள் மின்சார துண்டிப்பு போன்ற காரணங்களால் அணைக்கப்பட்டால் மட்டும் மீண்டும் அவற்றை இயக்கும்படி செல்லிடப்பேசியில் அழைத்து தகவல் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது

அதற்கு மாதந்தோறும் தனியாக தொகை கொடுத்து வந்துள்ளார். இந்த போலி இணையவழி தொலைபேசி சேவைகள் மூலம் பணம் மோசடி, தீவிரவாத தொடர்புகள் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தஞ்சையில் பிடிபட்ட நபர் மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com