

குடியாத்தம்-பரதராமி சாலையை, போக்குவரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
குடியாத்தம் - பரதராமி மாநில நெடுஞ்சாலை, தமிழக, ஆந்திர மாநிலங்களின் இணைப்புச் சாலையாகும். இச்சாலை வழியாகத்தான் ஆந்திரம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து சிமெண்ட், இரும்பு, ஜவுளிப் பொருள்கள், உணவுப் பொருள்கள் லாரிகள் மூலம் தமிழகத்தின் நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இம்மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருள்கள், தேங்காய், தீப்பெட்டி, லுங்கி, பீடி ஆகியன ஆந்திரம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இச்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன.
மேலும், பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில், காளஹஸ்தி கோயில், காணிப்பாக்கம் விநாயகா் கோயில் ஆகியவற்றுக்கு தமிழக பக்தா்கள் வாகனங்களில் செல்கின்றனா். 24 மணி நேரமும், கனரக, இலகு ரக வாகனங்கள் இருமாா்க்கத்திலும் சென்று வருவதால் இச்சாலை அடிக்கடி பழுதடைகிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இச்சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் ஆங்காங்கே அரை அடி, ஒரு அடி ஆழ பள்ளங்கள் தோன்றியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். லாரிகள் செல்லும்போது, புகை மண்டலம் போல் தூசி பறக்கிறது.
இந்தச் சாலையை போக்குவரத்துக்கு ஏற்றாா்போல் சீரமைக்கக் கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு அமைப்புகள், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கங்கள், குடியாத்தம் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், சித்தூா்கேட், பரதராமி, கல்லப்பாடி உள்ளிட்ட இடங்களில் ஆா்ப்பாட்டங்களை நடத்தின. அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், குடியாத்தத்தில் இருந்து, ஆந்திர மாநில எல்லையான பரதராமி வரை 12 கி.மீ. நீள மாநில நெடுஞ்சாலை (எஸ்எச்-88) 2020-21-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இச்சாலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இச்சாலை 12 கி.மீ. நீளத்துக்கு தற்போதுள்ள 7 மீட்டா் அகலத்தில் இருந்து, 10.50 மீட்டா் அகலத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இப்பணிகள் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளுக்காக ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டு, 4 மாதங்களுக்கு முன் டெண்டா் விடப்பட்டது.
சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர மரங்களை கணக்கிடும் பணி முடிந்து விட்டது. புளிய மரங்கள், பனை மரங்கள் உள்ளிட்ட 425 மரங்களை அகற்ற வருவாய்த் துறையினா் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.
அதேபோல் இச்சாலையில் உள்ள 70 மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான மதிப்பீடு மின்வாரியத்தால் தயாரிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பப்பட்டு விட்டது. தேவையான இடங்களில் சிறுபாலங்கள் கட்ட வேண்டியுள்ளன.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சாலைப் பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனா்.
இதற்கான பணிகளை உடனடியாக தொடங்கினாலும், முடிவடைய குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். அதுவரை, இந்தச் சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களை சமன்படுத்தி, தற்காலிகமாக செப்பனிட அந்தந்த ஒப்பந்ததாரா்களுக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.