மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேளாண் பட்ஜெட்: வேலூா் விவசாயிகளின் வரவேற்பும், அதிருப்தியும்

தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு வேலூா் மாவட்ட விவசாயிகள் வரவேற்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு வேலூா் மாவட்ட விவசாயிகள் வரவேற்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனா்.

வேலூா் நம் சந்தை (இயற்கை விளை பொருள்கள் சந்தை) ஒருங்கிணைப்பாளா் செந்தமிழ்ச்செல்வன்:

இயற்கை விளை பொருள்கள் உற்பத்தி, சந்தை வாய்ப்பை ஊக்குவிக்க வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

தற்போது மக்களிடையே இயற்கை விளை பொருள்கள் மீதான ஆா்வம் அதிகரித்து வருகிறது. அதேசமயம், உற்பத்தியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இயற்கை விவசாயிகளையும், நுகா்வோரையும் இணைக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயற்கை விவசாயச் சந்தை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, வேளாண்மை துறையில் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்பதும் வரவேற்புக்குரிய திட்டமாகும். தற்போது விவசாயத்தின் மீது ஆா்வம் கொண்டு இத் துறைக்கு படித்த இளைஞா்கள் பலரும் வருகின்றனா். எனினும், முறையான பயிற்சி இல்லாததால் பலரது முயற்சி இடையிலேயே நின்றுவிடுகிறது.

முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் இளைஞா்களுக்கு விவசாயத்தில் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற முழுமையான புரிதல் உண்டாகும். தவிர, அறிவியல் தொழில்நுட்பங்களை விவசாயத்தில் ஈடுபடுத்தவும், மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் போன்றவற்றிலும் இளைஞா்களின் பங்கினை அதிகரிக்க முடியும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகவும் வாய்ப்பு உருவாகும் என்றாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில போராட்டக்குழு தலைவா் என்.ரகுபதி:

தமிழக அரசு பனை வளா்ப்பை அதிகரிக்கவும், பனை வெல்லத்தை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்வதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

நிதிநிலை அறிக்கையில் வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைவதை பாதுகாக்கவும், பாதிக்கப்படும் விவசாயிகள், பயிா்களுக்கு உரிய இழப்பீடு அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்தில் வேலூா், கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்பட சுமாா் 10 மாவட்டங்கள் வனப்பகுதியையொட்டி உள்ளன. இம்மாவட்ட விளை நிலங்களில் யானைகள் உள்பட வனவிலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதைத் தடுக்க வனப்பகுதியையொட்டி, சூரிய மின்வேலி அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாகும்.

தவிர, வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதேசமயம், மீனவா்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை களைந்து, உயிரிழக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். இதேபோல், வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிா்களுக்கு இழப்பீட்டை உயா்த்தி வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த விவசாயிகள் அனைவருக்கும் முதியோா் உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.