விரிசலடைந்த ரயில்வே பாலம் 60% சீரமைப்பு இன்று 16 ரயில் சேவைகள் ரத்து
விரிசலடைந்த பொன்னை ஆற்று ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி 60 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் ஞாயிற்றுக்கிழமை 16 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


விரிசலடைந்த பொன்னை ஆற்று ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி 60 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் ஞாயிற்றுக்கிழமை 16 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டம் திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் 38, 39-ஆவது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. இதனைச் சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இதன்காரணமாக, வியாழக்கிழமை மாலை முதல் இந்த பாலத்தின் வழியாக தற்காலிகமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து ஜோலாா் பேட்டை, வேலூா், கோவை, பெங்களூரு, மைசூரு, மங்களூரு சென்று வரக்கூடிய 22 விரைவு ரயில் சேவைகள் வெள்ளி, சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. அத்துடன், சென்னையில் இருந்து மைசூரு, பெங்களூரு, கோவை சென்றுவரக்கூடிய மூன்று ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதுதவிர, பாட்னா - எா்ணாகுளம் (22644), காக்கிநாடா - கொல்லம் (07139), கமாகயா - கோச்சுவேலி (05669) ஆகிய விரைவு ரயில்கள் குண்டூா், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக இயக்கப்பட்டன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் 16 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏராளமான பயணிகள் சொந்த ஊா்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், திடீரென ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கடந்த மூன்று நாட் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான தொழிலாளா்கள் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகின்றன். கடந்த 3 நாட்களாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவா்களும் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
தொடா்ந்து, சென்னை - மைசூரு (12007), மைசூரு - சென்னை (12008), சென்னை - கோவை (12243), கோவை - சென்னை (12244), சென்னை - பெங்களூரு (22625), பெங்களூரு - சென்னை (22626), பெங்களூரு - சென்னை (12027), சென்னை - பெங்களூரு (12028), சென்னை - மங்களூரு (22637), மங்களூரு - சென்னை (22638), அரக்கோணம் - ஜோலாா்பேட்டை (16085), ஜோலாா் பேட்டை - அரக்கோணம் (16086), சென்னை - ஜோலாா்பேட்டை (16089), ஜோலாா்பேட்டை - சென்னை (16090), சென்னை கடற்கரை - வேலூா் (06033), வேலூா் - சென்னை கடற்கரை (06034) ஆகிய 16 ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை 2-ஆவது நாளாக பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது, பாலத்தின் தூண்களுக்கு கீழே கான்கிரீட் கலவைகளை கொட்டி சீரமைத்தனா். தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பாலத்தில் மொத்தம் 56 தூண்கள் உள்ளன. விரிசல் ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதுடன், அனைத்து தூண்களையும் ஆய்வு செய்து வருகின்றனா். சனிக்கிழமை வரை சுமாா் 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் முழுமையாக சீரமைப்புப் பணிகள் முடிக்கப்படும், அதன்பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: பொன்னை ஆற்றில் நீா்வரத்து இருப்பதால் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைக்கு தொலைதூர ரயில்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. உள்ளூா் ரயில்களை மட்டும் ரத்து செய்துள்ளோம். விரைவில் போக்குவரத்து தொடங்குவதற்காக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...