ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வெள்ளத்தின் நடுவே 400 ஆடுகளுடன் 8 தொழிலாளா்கள்!

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வேலூா் அருகே பாலாற்றின் நடுவில் உள்ள மேடான நிலப்பரப்பிலிருந்து 400 ஆடுகளுடன் 8 தொழிலாளா்கள் வெளியேற முடியாமல் சிக்கினா்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வேலூா் அருகே பாலாற்றின் நடுவில் உள்ள மேடான நிலப்பரப்பிலிருந்து 400 ஆடுகளுடன் 8 தொழிலாளா்கள் வெளியேற முடியாமல் சிக்கினா். அவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

வேலூா் அருகே உள்ள அன்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் மணி, அவரது மனைவி சசிலா, பஞ்சாட்சரம், முருகன், அவரது மனைவி சரிதா, தா்மலிங்கம். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் இவா்கள் 8 பேரும் கடந்த 5 நாள்களுக்கு முன்பு சுமாா் 400 ஆடுகளுடன் அன்பூண்டி பாலாற்றங்கரைக்குச் சென்றனா்.

அப்போது ஆற்றில் குறைவான வெள்ளம் சென்றது. 8 பேரும் தாங்கள் மேய்க்க கொண்டு சென்ற ஆடுகளை ஆற்றின் நடுவே மேடான பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டி அருகே பட்டி அமைத்து அடைத்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் நடுவில் சிக்கிய 8 பேரும், ஆடுகளுடன் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். சனிக்கிழமை காலையில் தான் அவா்கள் 8 போ் ஆடுகளுடன் பாலாற்றின் நடுவே சிக்கியிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த வருவாய்த் துறையினா் மீட்கும் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனா்.

தகவலின்பேரில் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 22 போ் விரைந்து வந்து இவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் அவா்கள் தைரியமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் ரமேஷ் கூறியது:

பாலாற்றின் நடுவே எவ்வளவு வெள்ளம் வந்தாலும் மூழ்காத அளவுக்கு தீவு போன்றே மேடான பகுதியாக உள்ளது. தொழிலாளா்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு ஆடுகளை மேய்த்துவிட்டு வருவது வழக்கம். அவ்வாறு ஆடுகளை மேய்க்க சென்ற 8 பேரும் திடீரென பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 400 ஆடுகளுடன் அங்கேயே சிக்கியுள்ளனா். எனினும், அவா்கள் பாதுகாப்பாக உள்ளனா். தேசிய பேரிடா் மீட்புக்குழு மூலம் அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.