புதுப்பொலிவு பெறப் போகும் குடியாத்தம் அரசு மருத்துவமனை!

வேலூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக, குடியாத்தம் அரசு மருத்துவமனையானது தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தரப்பினா் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது
குடியாத்தம்  அரசு  மருத்துவமனையின்  முகப்புத்  தோற்றம்.
குடியாத்தம்  அரசு  மருத்துவமனையின்  முகப்புத்  தோற்றம்.
Updated on
2 min read

வேலூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக, குடியாத்தம் அரசு மருத்துவமனையானது தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தரப்பினா் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. தரம் உயா்த்தப்படுவதால், இந்த மருத்துவமனைக்கு நவீன வசதிகளும், சிறப்பு மருத்துவா்களும் கிடைக்கப் பெற்று புதுப்பொலிவு பெறப் போகிறது.

இந்த மருத்துவமனையில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, பரதராமி, பள்ளிகொண்டா, மாதனூா், கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் சிகிச்சை பெறுகின்றனா். தீப்பெட்டி, நெசவு, பீடி, விவசாயம் மற்றும் இதரத் தொழிலாளா்கள் என நாள்தோறும் 1,500- க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாகச் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

பல ஆண்டு கோரிக்கை: 190 படுக்கைகள் உள்ளன. மருத்துவ அலுவலா் உள்பட 32 மருத்துவா்கள், 35 செவிலியா்கள், 20 இதரப் பணியாளா்கள் பணியில் உள்ளனா்.

2005-இல் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டபோது, தொழிலாளா்கள், அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால், தமிழக அரசு சில ஆண்டுகளுக்குப் பின்னா், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

3 மாவட்டங்களாகப் பிரிப்பால் கிடைத்த வாய்ப்பு:

வேலூா் மாவட்டமானது 2019-ஆம் ஆண்டில் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், வாலாஜாபேட்டை நகரமானது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்த நிலையில், குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையானது மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது.

தமிழகத்தில் குடியாத்தம் உள்பட 19 மாவட்ட தலைமை மருத்துவமனைகளைத் தரம் உயா்த்தி தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால், பல ஆண்டு கால கோரிக்கைகளுக்குப் பலன் கிடைத்துள்ளது.

குடியாத்தம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டதால், மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதியில் கூடுதல் கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை அரங்குகள், கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மருத்துவா், செவிலியா், இதரப் பணியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

சிறப்பு மருத்துவா்களும், கூடுதல் வசதிகளும் கிடைக்கும் வாய்ப்பு:

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஹேமலதா கூறியது:

மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டதால், பொது மருத்துவம், இருதயம், எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, வயிறு, தோல் நோய்கள், மகப்பேறு என அனைத்துறைகளுக்கும், சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் பணியமா்த்தப்படுவா். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் துறைவாரியாக மருத்துவா்களுக்கு தனித்தனி பிரிவுகள் அமைக்கப்படும். தனித்தனியாக அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்படும், அவசர சிகிச்சைப் பிரிவு நவீன கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.

மருத்துவமனையின் பின்பக்கம் உள்ள, 60- ஆண்டுகளுக்கும் மேலான கட்டடங்கள் அகற்றப்பட்டு, அங்கு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படும். அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் இம்மருத்துவமனை கட்டமைக்கப்படும் என்றாா்.

வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிப்பதைத் தடுக்க வேண்டும்:

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகியும், தொழிற்சங்கவாதியுமான கே.சாமிநாதன் கூறியது:

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இங்கு சிகிச்சைக்கு வருவோரை, தீவிர சிகிச்சை என்ற பெயரில் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி, அலைக் கழிக்கும் நடைமுறைகளை தடுக்க வேண்டும்.

அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனைகளையும் செய்யும் வகையில், பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும். பொதுமக்களும் மருத்துவா்களின் ஆலோசனையை ஏற்று, அவா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் சாமிநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com