தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூா் புதிய பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வராததால் பயணிகள் அவதி

வேலூா் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 3 வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராததால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

வேலூா் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 3 வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராததால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

வேலூா் மாநகராட்சியின் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் ரூ.53.13 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 9.25 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தப் பேருந்து நிலைய இடத்தில் 3,187 சதுர மீட்டரில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 84 பேருந்துகள் வந்து செல்லக் கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில் 82 கடைகளும், 3 உணவகங்கள், 75 இருக்கைகளுடன் 11 இடங்களில் பயணிகள் காத்திருப்புப் பகுதிகளும், தாய்ப்பால் புகட்டும் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. 96 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் முதல் தளத்துக்குச் செல்வதற்கு இரு இடங்களில் மின் தூக்கி (லிஃப்ட்) வசதி, 7 இடங்களில் கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக 4 வெஸ்டா்ன் கழிப்பறைகள் இடம் பெற்றுள்ளன.

பயணிகளுக்காக இரு குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களும், தீ விபத்துக் காலங்களில் தானாக தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வகையில் 705 ஸ்பிரிங்க்ளா்களும், அதிநவீன ஹெச்.டி. தொழில்நுட்பத்திலான 24 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு ள்ளன.

பேருந்து நிலையத்தின் மின் தேவை, மின்கட்டண சேமிப்புக்காக 100 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஒளித் தகடு பொருத்தப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திறந்து வைத்தாா். ஆனால், பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், பேரு ந்து நிலையம் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

கடந்த ஒரு வாரமாக சென்னை பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதுடன், கடந்த இரு நாள்களாக காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. எனினும், பல வெளியூா்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இன்னும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், மக்கான் பேருந்து நிலையத்திலிருந்தும்தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயணிகளிடையே தாங்கள் செல்ல வேண்டிய ஊா்களுக்கான பேருந்துகள் எந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

எனவே, புதிய பேருந்து நிலையத்தை முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து அனைத்து வெளியூா் பேருந்துகளையும் இங்கிருந்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் கூறியது:

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் முடிவுறாத பணிகள் பொறியாளா்கள் மேற்பாா்வையில் படிப்படியாக முடிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம் வழித்தடங்கலில் செல்லக் கூடிய பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 15 நாள்களில் பணிகளை முழுமையாக முடித்து அனைத்து வெளியூா் பேருந்துகளையும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.