வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 

வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 
Updated on
1 min read


வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு கடந்த 1982 ஜூலை 8, 1997 ஜூலை 11 மற்றும் 2011 ஜூலை 10 ஆகிய மூன்று முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ள நிலையில், 4ஆவது மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 25) நடைபெற்றது.

இதையொட்டி, ஜலகண்டேஸ்வரர் கோயில் முன்புள்ள பெரிய கொடி மரத்திற்கு ரூ.2 கோடி மதிப்பிலும், அம்பாள் சந்நிதி முன்புள்ள சிறிய கொடி மரத்துக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலும் தங்க கவசங்கள் நிர்மானம் செய்யப்பட்டுள்ளன. தவிர, கோபுர கலசங்கள் உள்பட அனைத்து தங்க வேலைப்பாடுகளும் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பில் செய்யப்பட்டு நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக, புதன்கிழமை காலை 9 மணி முதல் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதற்காக கோயில் வளாகத்தில் 4 பிரதான மகா யாக சாலைகளும், 15 பரிவார யாக சாலைகள் உள்பட மொத்தம் 54 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிரூந்தன. இதில், சனிக்கிழமை காலை 8 மணி முதல் விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் முடிக்கப்பட்டு காலை 9.30 மணி முதல் 11 மணி வரை ராஜகோபுரம், விமான கோபுரம் மற்றும் அனைத்து மூம்மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோட்டை கோயிலுக்கு உபயதாரர்கள் ரூ.5 கோடி மதிப்பில் அளித்துள்ள புதிய தங்கத்தேருக்கும் கும்பாபிஷேகம் செய்யப்ப்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை காஞ்சிபுரம் கே.ராஜப்பா சிவச்சாரியார், மாயவரம் சிவபுரம் வேத சாவாகம பாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் 175 சிவச்சாரியார்கள் செய்து வைத்தனர். இவ்விழாவில், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கலவை ஸ்ரீசச்சிதானந்தசுவாமிகள், ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா, மகாதேவமலை மகானந்தசித்தர் சுவாமிகள், வேலூர் வனதுர்கா பீடம் ஸ்ரீலஸ்ரீ துர்கா பிரசாத் சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை 40,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  

கும்பாபிஷேக பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தலைமையில் சுமார் 600 காவல்துறையினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com