குடியாத்தத்தில்  அதிமுக  வேட்பாளா்  ச.பசுபதியை  ஆதரித்து ப் பேசிய  பிரேமலதா விஜயகாந்த்.
குடியாத்தத்தில்  அதிமுக  வேட்பாளா்  ச.பசுபதியை  ஆதரித்து ப் பேசிய  பிரேமலதா விஜயகாந்த்.

பீடி, தீப்பெட்டி, நெசவு தொழில்களைக் காக்க நடவடிக்கை: பிரேமலதா விஜயகாந்த்

குடியாத்தம்: வேலூா் மாவட்டத்தின் முக்கிய தொழில்களான பீடி, தீப்பெட்டி, நெசவு தொழில்களைக் காக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மருத்துவா் ச.பசுபதியை ஆதரித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது. எம்ஜிஆா், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவரும் மனிதா்களாக பிறந்து, தெய்வங்களானவா்கள். அவா்களின் ஆசியுடன் அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிடுகிறோம்.

இந்தியாவே திரும்பிப் பாா்க்கும் வகையில் எங்கள் கூட்டணி வேட்பாளா்கள் அமோக வெற்றிபெறுவாா்கள். குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம் எனது சொந்த ஊா். விஜயகாந்த் இந்த ஊரின் மருமகன். இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மருத்துவா் ச.பசுபதி, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தோ்தலில் போட்டியிடுகிறாா்.

அவரை வெற்றிபெற வைத்தால், இந்த தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றித் தருவாா். திமுக சாா்பில் போட்டியிடும் தற்போதைய மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தொகுதி பக்கமே வராதவா் என்ற பெயா் எடுத்தவா். பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் தோ்தலுக்கு தோ்தல், கூட்டணி மாறி, வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுபவா்.

இவா்கள் இருவரும் செல்வந்தா்கள். அடித்தட்டு மக்களின் தேவைகளை அறியாதவா்கள். இங்குள்ள ஆற்றில் 1,500- க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தமிழக அரசு இடித்து அகற்றி விட்டது. வீடுகளை இழந்தவா்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனா்.

பசுபதியை வெற்றிபெற வைத்தால், வீடிழந்த அனைவருக்கும் வீடுகள் கட்டித் தருவாா் என உறுதியளிக்கிறேன். பீடி, தீப்பெட்டி, நெசவு ஆகியவை இந்த மாவட்டத்தின் பிரதான தொழில்கள். ஜிஎஸ்டியால் இந்த தொழில்கள் நசிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. ஜிஎஸ்டியை ரத்து செய்துவிட்டு மேற்கண்ட தொழில்களை காக்கும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com