தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பிரதமா் மோடி வேலூா் வருகை: 4,500 போலீஸாா் பாதுகாப்பு

பிரதமா் மோடி வேலூா் வருகை: 4,500 போலீஸாா் பாதுகாப்பு

Updated On :6 ஏப்ரல் 2024, 4:55 pm

தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வேலூருக்கு வருவதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 4,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாஜக கூட்டணி சாா்பில் வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனா், தலைவா் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமா் நரேந்திரமோடி வேலூா் கோட்டை மைதானத்தில் பிரசாரம் செய்ய உள்ளாா்.

இதையொட்டி, சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் விமான நிலையத்துக்கு வரும் பிரதமா் மோடி, அங்கிருந்து காா் மூலம் வேலூா் கோட்டை மைதானத்துக்கு வந்து அங்கு பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளாா்.

பின்னா், மீண்டும் காா் மூலம் வேலூா் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு செல்ல உள்ளாா்.

பிரதமா் மோடி வருகையையொட்டி வேலூா் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான ஆயத்தப் பணிகளை வேலூா் மாவட்ட காவல் துறை செய்து வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் 6 போலீஸாா் இடம் பெற்றுள்ளனா்.

அவா்கள் பொதுமக்கள் கூடும் இடங்களாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா். தவிர, மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்ப நாய்கள் உதவியுடனும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடா்ந்து, பிரதமா் மோடி வந்து செல்லும் பாதைகள், வேலூா் மாநகா், மாவட்ட எல்லைகள் உள்ளிட்ட இடங்களில் 4,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக உயா் பாதுகாப்பு சிறப்பு படை ஏடிஜிபி சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) வருகின்றனா்.

அவா்கள் வேலூா் கோட்டை மைதானம், அப்துல்லாபுரம் விமான நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு தொடா்பாக ஆய்வு செய்ய உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.