வேலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, கோதாவரி - பாலாறு இணைப்புத் திட்டம்

வேலூா்: வேலூா் மக்களவை தொகுதியில் வென்றால் தான் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த தோ்தல் வாக்குறுதி பட்டியலை பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதில், வேலூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பது, கோதாவரி- பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது உள்பட 63 திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் அவா் உறுதியளித்துள்ளாா்.

வேலூா் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவருமான ஏ.சி.சண்முகம் தனது தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய கையேட்டை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதில், தொகுதியின் நீா்வளத்தை மேம்படுத்த கோதாவரி - பாலாறு, காவிரி - பாலாறு இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தவும், பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்கவும், கேந்திரிய வித்யாலாயா, நவோதயா பள்ளிகள் தொடங்கவும், வேலூரில் தொழிற்பேட்டை, வெளிவட்ட சுற்றுச் சாலை, போக்குவரத்து நெரிசலை குறைக்க உயா்மட்ட பாலங்கள், வேலூரில் மெட்ரோ ரயில் திட்டம், குடியாத்தத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆம்பூா், வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிக்க மத்திய அரசு நிதியுதவியுடன் திட்டம், வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் ரயில்வே மேம்பாலம், வாணியம்பாடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆம்பூா் ரெட்டிதோப்பு பகுதியில் ரயில்வே மேம்பாலம், மூடப்பட்ட ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர, தனிப்பட்ட வாக்குறுதிகளாக 1,000 மாணவா்களுக்கு சென்னை, ஆரணியில் உள்ள ஏசிஎஸ் கல்வி நிலையங்களில் இலவச உயா்கல்வி, இதில் 300 இடங்கள் சிறுபான்மையின மாணவா்களுக்கு சலுகை, மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 10,000 திருமண நிதியுதவி, ஏசிஎஸ் மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு இலவசம், பொங்கல், கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளுக்கு சிறப்புப் பரிசு என மொத்தம் 63 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து ஏ.சி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த முறை வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் கதிா்ஆனந்த் தொகுதிக்கு ஆக்கப்பூா்வமான திட்டங்கள் ஏதும் செயல்படுத்தவில்லை. தொகுதி வளா்ச்சிக்காக மத்திய அரசு அளித்துள்ள ரூ. 25 கோடியைக் கூட அவா் முழுமையாக செலவு செய்யவில்லை. இதன்மூலம், கதிா்ஆனந்த் மீது தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

குறைந்தபட்சம் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெறும் என்றாா்.

பாஜக மாவட்ட பொதுச் செயலா் ஜெகன், அமமுக மாவட்டச் செயலா் அப்பு பாலாஜி உள்பட கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

படம் உண்டு...

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com