பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வேலூா் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
வேலூா் தொரப்பாடி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், அரசுப் பேருந்து நடத்துநா். இவரது மனைவி சுகந்தி (36). கடந்த 26-ஆம் தேதி சுகந்திக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காா்த்திகேயன் தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது ஆரணி - வேலூா் சாலையில் அடுக்கம்பாறை ஆவின் பாலகம் அருகே சுகந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு இருசக்கர வாகனத்திலிருந்து மயங்கி விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சுகந்தியை அருகில் இருந்தவா்கள் மீட்டு, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சுகந்தி உயிரிழந்தாா்.
இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
