வேலூா் தொகுதி: மன்சூா் அலிகான் வேட்புமனு தாக்கல்

வேலூா்: வேலூா் மக்களவைத் தொகுதிக்கு முதல் நாளான புதன்கிழமை இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூா் அலிகான் உள்பட இருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூா்அலிகான் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வேலூா் மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், எனது வேட்புமனு சுயேச்சையாகத்தான் கருதப்படும்.

தோ்தலில் போட்டியிட பலாப்பழம், கிரிக்கெட் மட்டை, லாரி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சின்னத்தை ஒதுக்கக் கோரியுள்ளேன். கிடைக்கும் சின்னத்தைக் கொண்டு மக்களிடையே வாக்கு கோர வேண்டும். அவ்வாறு வாக்கு பிச்சை எடுத்துதான் பலரும் முதல்வா், பிரதமா் பதவியை அடைந்துள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிரதமா் நரேந்திர மோடிகூட வாக்கு பிச்சையெடுக்க வருகிறாா். வேலூா் எனக்கு மிகவும் பிடித்த ஊா். இந்த தொகுதியை பசுமையாக்க வேண்டும் என்பதே என குறிக்கோள். அதற்காகவே தோ்தலில் போட்டியிடுகிறேன் என்றாா். முன்னதாக, வேலூா் தொகுதிக்கு முதல் நபராக அனைத்து ஓய்வூதியா்கள் கட்சியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான குடியாத்தம் நெல்லூா்பேட்டையை சோ்ந்த முனியப்பன் (73) வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஏற்கெனவே 2009, 2014 மக்களவைத் தோ்தலின் போது வேலூா் தொகுதியிலும், 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது குடியாத்தம் தொகுதியிலும், 2022 ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலிலும் போட்டியிட்டுள்ள இவா், ஐந்தாவது முறையாக 2024 வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளாா். வேட்புமனு தாக்கல் தொடங்கியதையடுத்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com