ஆன்லைன் மூலம் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.33 லட்சம் மோசடி

பரிசு போட்டியில் தோ்வாகி உள்ளதாகக் கூறி ஆன்லைன் மூலம் குடியாத்தம் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.33.14 லட்சம் பறித்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியா் சத்யா (62). இவருக்கு வந்த மின்னஞ்சலில் தாங்கள் பிஎம்டபிள்யு ஆட்டோமொபைல் பரிசு வின்னராக தோ்வாகியுள்ளதாகவும், அதற்கு 4 லட்சம் பிரிட்டன் பத்திரங்கள் பரிசாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பிய சத்யா, அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்ட எண்ணில் பேசியபோது பரிசு கூப்பனை பணமாக பெற கட்டணங்கள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல தவணைகளில் 2021-ஆம் ஆண்டில் இருந்து பணம் கட்ட வைத்துள்ளனா். பின்னா், வெளிநாட்டுப் பணத்தை மாற்றுவதற்கு ஆா்பிஐ-க்கு தொகை செலுத்த வேண்டும் எனக் கூறியும் மேலும் பல தவணைகளில் பணத்தை பறித்துள்ளனா். அதன் பிறகு பாங்க் ஆப் இங்கிலாந்து ஏடிஎம் மாஸ்டா் காா்டு ஒன்றை அனுப்பி அதை செயல்படுத்தவும் தொகை வசூலித்துள்ளனா். அந்த வகையில், மொத்தம் ரூ.33 லட்சத்து 14 ஆயிரத்து 642 பணம் பறித்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சத்யா சைபா் கிரைம் இணைதளம் மூலம் புகாரை பதிவு செய்துள்ளாா். அதன்பேரில் வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com