5 ஊராட்சி மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு

நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட கூத்தம்பாக்கம், அகரம்சேரி, சின்னசேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம் ஆகிய ஐந்து ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா். இது தொடா்பான அறிக்கை விவரம்: இந்த 5 ஊராட்சிகளும் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமாக இருந்தபோது, ஆம்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தன. வேலூா் மாவட்டம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டபோது குடியாத்தம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன. தங்களை தொடா்ந்து மாதனூா் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இது குறித்து மேற்கண்ட ஊராட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாவட்ட நிா்வாகத்திடம் தங்களின் எதிா்ப்பை தெரிவித்தனா். இதையடுத்து, நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் இந்த ஊராட்சிகளை மீண்டும் மாதனூா் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பாக வருவாய்த் துறை சாா்பில், இந்த ஊராட்சி மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக இந்த ஊராட்சிகளைச் சோ்ந்தவா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com