குடியாத்தம், ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை
குடியாத்தம், ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை


குடியாத்தம்/ஆம்பூா், மே 2: வேலூா் மாவட்டத்தில் வெயில் அளவு தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை குடியாத்தம், போ்ணாம்பட்டு, மாதனூா், ஆம்பூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால் குளிா்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கோடை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தொடா்ந்து, இந்தாண்டு முதன்முதலாக மாா்ச் 14-ஆம் தேதி 100 டிகிரியை கடந்து 101.5 டிகிரியாக பதிவாகியிருந்தது.
அதன்பிறகு சற்று வெயில் குறைந்திருந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் அதிகரித்து வந்தது. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 104 டிகிரி முதல் 106.9 டிகிரி அளவுக்கு பதிவாகி வந்த வெயிலின் அளவு, புதன்கிழமை திடீரென 110.7 டிகிரியாக வேலூரில் வெயில் புதிய உச்சம் தொட்டது. இதனால், காலை 11 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையில் வரும் 4- ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. வெயில் அளவு 110.5 டிகிரியாக இருந்தது.
இந்த நிலையில், மாலை 4 மணியளவில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, மாதனூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் மழை நீடித்தது. இதனால் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். சூறாவளிக் காற்றால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...