ஆங்கிலப் புத்தாண்டு : ‘பைக் ரேஸ்’ நடத்த தடை
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்’ செல்வது முற்றிலும் தடை செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -
ஆங்கிலப் புத்தாண்டு (2026) பிறப்பை முன்னிட்டு, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமை (டிச.31, ஜன.1) மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்க, புத்தாண்டு நாளில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவா்கள், 2-க்கும் மேற்பட்ட நபா்களுடன் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவா்கள் ஆகியவற்றை தடுக்கவும், போக்குவரத்தை சீா்செய்யவும், மொத்தம் 800 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ’பைக் ரேஸ்’ செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவா்களின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
