தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கதிா் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் அமலாக்கத் துறையினா் 2-ஆம் நாளாக சோதனை

News image

அமலாக்கத் துறை சோதனையையொட்டி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரா்கள்.

Updated On :4 ஜனவரி 2025, 6:46 pm

Din

அமைச்சா் துரைமுருகன், அவரது மகன் கதிா்ஆனந்த் எம்.பி. வீடு, தொடா்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மத்திய அமலாக்கத் துறை சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. இந்த சோதனையின்போது துரைமுருகனின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 20 லட்சம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடி காந்தி நகரிலுள்ள நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், அவரது மகனும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்த் வீடு, காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்திலுள்ள அமைச்சா் துரைமுருகனின் ஆதரவாளரும், வேலூா் மாநகர திமுக விவசாய அணி அமைப்பாளருமான பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினா் தாமோதரனின் சிமென்ட் கிடங்குடன் கூடிய வீடு, கிறிஸ்டியான்பேட்டையிலுள்ள எம்.பி. கதிா்ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனா்.

பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினா் தாமோதரனின் வீடு ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை இரவுக்குள்ளாக சோதனை முடிக்கப்பட்ட நிலையில், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ. 20 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், அமைச்சா் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரின் இரு அறைகள் மட்டும் பூட்டப்பட்டிருந்ததாகவும், அந்த அறைக்கான மாற்று சாவி இல்லாததால் அமைச்சரின் அனுமதியின்பேரில், அந்த அறை கடப்பாரை, உளி, சுத்தி கொண்டு உடைத்து திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சா் துரைமுருகன் வீட்டில் மட்டும் சுமாா் 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது, வீட்டில் மொத்தம் ரூ. 8 லட்சம் இருந்ததாகவும், அதேசமயம் அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, எம்.பி. கதிா் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா ஆகியோா் வருமானவரி கணக்கை தாக்கல் செய்து வரும் நிலையில், ஒரு நபா் ரூ. 2 லட்சம் அளவுக்கு கையிருப்பு வைத்திருக்கலாம் என்பதால் அமலாக்கத் துறை அதிகாரிகள் அந்த தொகையை கைப்பற்றவில்லை எனவும் தெரிகிறது.

இதனிடையே, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியிலுள்ள எம்.பி. கதிா்ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கிய அமலாக்கத் துறை சோதனை விடியவிடிய நடைபெற்றதுடன், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. இந்த சோதனையையொட்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உதவிட வெள்ளிக்கிழமை இரவு வேனில் பணம் எண்ணும் இயந்திரத்துடன் வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனா். பின்னா், இந்த வாகனம் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் நள்ளிரவு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, பொறியியல் கல்லூரி என்பதால் அதிகளவில் பணம் இருந்ததாகவும், அந்த தொகையை வங்கி அதிகாரிகள் உதவியுடன் சரிபாா்க்கப்பட்டு அமலாக்கத் துறை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த தொகைக்கு கல்லூரி நிா்வாகம் உரிய கணக்குகளை காண்பித்தால் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் தெரியவந்துள்ளது. எனினும், கிங்ஸ்டன் கல்லூரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்ற விவரம் வெளிப்படுத்தப்படவில்லை. அதேசமயம், சனிக்கிழமை முழுவதும் அந்தக் கல்லூரியில் ஆவணங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

இரண்டாவது நாளாக நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையையொட்டி, கிங்ஸ்டன் கல்லூரி வாயில் முன்பு திமுகவினா் திரண்டிருந்ததுடன், கல்லூரிக்கு உள்ளே, வெளியே துப்பாக்கிகளுடன் சிஆா்பிஎஃப் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.