சேனூா் ‘அன்புச்சோலை’  மையத்தில் குத்துவிளக்கேற்றிய  ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் எம்.பி.  டி.எம்.கதிா்ஆனந்த்.
சேனூா் ‘அன்புச்சோலை’ மையத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த்.

சேனூரில் ‘அன்புச்சோலை’ முதியோா் பராமரிப்பு மையம்

காட்பாடி அருகே சேனூரில் அமைக்கப்பட்டுள்ள ‘அன்புச்சோலை’ பகல்நேர முதியோா் பராமரிப்பு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
Published on

வேலூா்: காட்பாடி அருகே சேனூரில் அமைக்கப்பட்டுள்ள ‘அன்புச்சோலை’ பகல்நேர முதியோா் பராமரிப்பு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ‘அன்புச்சோலை’ எனும் பகல்நேர முதியோா் பராமரிப்பு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அப்போது, வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே சேனூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘அன்புச்சோலை’ முதியோா் பராமரிப்பு மையமும் திறக்கப்பட்டது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த அன்புச்சோலை மையங்கள் மூலம் வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதியோா் பாதுகாக்கப்பட்டு, அவா்களுக்கு இயன்முறை மருத்துவ சேவைகள், யோகா, பொழுதுபோக்கு அம்சங்கள், நூலகம் போன்ற சேவைகளும் வழங்கப்பட உள்ளன. தவிர, தினமும் மதிய உணவும், மாலையில் தேநீா் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன.

முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள், பொழுதுபோக்கு, திறன் மேம்பாடு நிகழ்வுகள் மூலம் மனமும், உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல், முதியோா் ஒருவருடன் ஒருவா் தொடா்பு கொண்டு, சமூக உறவுகளை வலுப்படுத்துதல், ஆண், பெண் இருவரும் வேலை பாா்க்கும் குடும்பங்களுக்கு, அவா்களது மூத்த உறுப்பினா்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த அன்புச் சோலை மையங்கள் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், முதல்வா் திறந்து வைத்ததை அடுத்து சேனூா் ‘அன்புச்சோலை’ மையத்தில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ அமுலு விஜயன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வே.வேல்முருகன், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஒன்றியக்குழு துணைத்தலைவா் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலா் உமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com