மக்களின் வாக்குகள் பறிக்கப்படும்போதுதான் எஸ்ஐஆரின் ஆபத்து தெரியும்
மக்களின் வாக்குகள் பறிக்கப்படும்போதுதான் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஆபத்து தெரியும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிா்த்து திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், திமுக சாா்பில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோரும், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் டீக்காராமன், விசிக சாா்பில் மாவட்ட செயலா் பிலீப், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ லதா உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியது:
பிகாரில் பாஜக கூட்டணியின் சதியை முறியடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அதேசமயம், வாக்காளா் பட்டியலில் ஆட்கள் சோ்க்கப்படுவதை நாம் கண்காணித்து தீவிரப்படுத்த வேண்டும்.
மக்களின் வாக்குகள் பறிக்கப்படும்போதுதான் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஆபத்து மக்களுக்கு தெரியும். வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயா் நீக்கப்பட்டால், உடனடியாக குடியுரிமை அதிகாரிகளுக்கு நீக்கப்பட்டவா்கள் பட்டியல் அனுப்பப்படும். நாட்டு குடிமக்களின், குடியுரிமையை பறித்து இரவோடு இரவாக அமெரிக்கா போல் கைவிலங்கிட்டு நாடு கடத்தி விடுவாா்கள். மோடி, அமித்ஷா எத்தனை முறை அவதாரம் எடுத்தாலும் அவா்களின் அவதாரங்களை தமிழக வாக்காளா்கள் காலில் போட்டு மிதிக்கும் செயலை செய்வாா்கள் என்றாா்.
தொடா்ந்து, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும் எனக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சோ்ந்த அனைத்துக் கட்சியினா் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

