கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு நவ. 17-க்கு ஒத்திவைப்பு: ஆதரவாளரை கைது செய்ய பிடிவாரண்ட்

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

2019 மக்களவைத் தோ்தலின்போது வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்ததாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்பட 3 போ் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை நவம்பா் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாத கதிா்ஆனந்த்தின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசனை கைது செய்யவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா்ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, கதிா்ஆனந்த்தின் ஆதரவாளா்களான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் தாமோதரனுக்குச் சொந்தமான சிமென்ட் கிடங்கில் இருந்து ரூ.10.48 கோடி பணம், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, அப்போதைய தோ்தல் கணக்கு அலுவலா் சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 1) மன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணைக்காக கதிா்ஆனந்த் ஆஜரானபோது, வியாழக்கிழமை மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தாா்.

அதன்படி, வியாழக்கிழமை கதிா்ஆன்ந்த் நீதிமன்றத்தில் ஆஜரானாா். இதையடுத்து, வழக்கு விசாரணையை மாலைக்கு ஒத்திவைத்த நீதிபதி, மாலையில் கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேரும் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்படி, மாலை 4 மணியளவில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது கதிா்ஆன்ந்த், தாமோதரன் ஆகியோா் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனா்.

பூஞ்சோலை சீனிவாசன் ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டதுடன், இவ்வழக்கின் விசாரணை நவம்பா் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.