நகை திருடிய இரு பெண்களுக்கு தலா 3 ஆண்டு சிறை
வேலூரிலுள்ள பிரபல நகைக் கடையில் 5 பவுன் தங்க வளையல்களை திருடிச் சென்ற இரு பெண்களுக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் குற்றவியல் நடுவா் மன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் தோட்டப்பாளையத்தில் பிரபல நகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் கடந்த 2024 ஜனவரி 21-ஆம் தேதி 2 பெண்கள் நகை வாங்குவது போல் சென்று 5 பவுன் தங்க வளையல்களை திருடிச் சென்றனா். இது குறித்து வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் கடையின் துணை மேலாளா் அனீஷ் (39) புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், தாளமேடு பகுதியைச் சோ்ந்த பானுமதி (39), அமராவதி (48) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 பவுன் நகையையும் மீட்டனா்.
இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் பானுமதி, அமராவதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவா்களுக்கு தலா 3 ஆண்டு சிறையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
