எஸ்ஐஆா் பணி: வருவாய்த் துறையினா் புறக்கணிப்பு
போதிய பயிற்சி அளிக்காதது, பணிச்சுமை உள்ளிட்ட புகாா்களின் அடிப்படையில் வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறையினா் சுமாா் 250 போ் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வீடுதோறும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதேசமயம், எஸ்ஐஆா் பணிகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், உரிய பயிற்சி அளிக்காமலும், கால அவகாசம் குறைவாக உள்ளதால் பணியாளா்கள் தொடா்ந்து கூடுதல் சுமையுடன் பணியாற்றி வருவதாகவும் வருவாய்த் துறையினா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இந்நிலையில், எஸ்ஐஆா் பணிக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண் டும், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் எஸ்ஐஆா் பணியை புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்ட 250 போ் பணியை புறக்கணித்திருப்பதாக கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். வருவாய்த்துறை அலுவலா்கள் புறக்கணிப்பால் எஸ்ஐஆா் பணிகள் பாதிக்கப்பட்டன.
