விடுதி பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.
விடுதி பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.

மத்திய அரசு நிதி ஒதுக்காததால் கிடப்பில் 11 ரயில்வே மேம்பாலங்கள்: அமைச்சா் எ.வ.வேலு

மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகத்தில் 11 ரயில்வே மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில்
Published on

வேலூா்: மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகத்தில் 11 ரயில்வே மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்துக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பெருமுகையில் ரூ.45.91 கோடியில் கலைஞா் நூற்றாண்டு தங்கு விடுதி கட்டப்பட்டு வருகிறது. 5 ஏக்கா் பரப்பில் 2 பகுதிகளாக 68,400 சதுர அடியில் தரைதளம், 3 தளங்களில் நவீன வசதிகளுடன் 119 அறைகளுடன் இந்த விடுதி கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்து.

இந்த கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

வெளிமாவட்ட, மாநில நோயாளிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெருமுகையில் சுமாா் ரூ.46.91 கோடியில் நவீன வசதிகளுடன் உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இந்த பணிகள் முடிந்தால் வரும் பிப்.28- ஆம் தேதிக்குள் திறக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கிராம அணுகு சாலைகள் அமைப்பது 95 சதவீகிதம் நிறைவுற்றுள்ளது. இன்னும் 5 சதவீத பணி கள் மட்டுமே உள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப் படுத்தவில்லை என்று தோ்தலை மனதில் வைத்து கூறுகிறாா். அவா் எதை, எங்கு பாா்த்தாா் என தெரிய வில்லை. எங்கெங்கு என குறிப்பிட்டு கூறினால் வருவாய்த்துறை மூலம் நிலங்களை கையகப்படுத்தித்தர தமிழக அரசு தயாராக உள்ளது.

70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க அறிவிக்கப்பட்டதில் 11 மேம்பாலங்களுக்கு நிதி ஒதுக்காததால் கிடப்பில் உள்ளது. மீதமுள்ள எல்லா பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு சா்வீஸ் சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தி திறப்பு விழாவும் செய்துவிட்டோம். வேலூா் மாவட்டத்தில் மேல்பட்டி, கூடாநகரம் ஆகிய 2 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. வேலூா் மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க சன்பீம் முதல் அரப்பாக்கம் வரையில் சுற்றுச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com