இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

இருமுனைப் போட்டியாக களம் மாறும்! கே. அண்ணாமலை சிறப்பு நேர்காணல்!

தினமணிக்கு கே. அண்ணாமலை அளித்த சிறப்பு நேர்காணல்...

News image

கே. அண்ணாமலை. - தினமணி

Updated On :12 ஏப்ரல் 2026, 10:40 pm

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி இருப்பவர் கே. அண்ணாமலை. காவல் துறை அதிகாரி பதவியைத் துறந்து, பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தது முதல், படித்த இளைஞர்கள் மத்தியிலும், தேசிய உணர்வுடைய வாக்காளர்கள் மத்தியிலும் மாற்றத்தின் வடிவமாக அவர் பார்க்கப்படுகிறார்.

தேர்தலில் களம் காணாமல், தமிழகமெங்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகச் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் கே. அண்ணாமலை கேரளம், புதுச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்டு கோவையில் தனது வீட்டுக்குத் திரும்பியபோது அவருடன் நடந்த சந்திப்பின் பதிவு இது-

திமுக-அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியை தமிழ்நாட்டுக்கும்-தில்லித் தலைமைக்கும் இடையிலான போட்டியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவகப்படுத்தி வருகிறாரே?

5 ஆண்டுகள் என்ன செய்தார் என்பதைப் பற்றி பேசாமல், தில்லி-தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருவது வேடிக்கையாக உள்ளது. தேர்தல் களத்தை திமுக தவறாக புரிந்து கொண்டுள்ளது. சாதனை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாததால், தில்லிக்கும், தமிழகத்துக்கும் நடைபெறும் போட்டி என்று திசை திருப்பப் பார்க்கிறார்கள் திமுகவினர்.

மாநில அரசு கேட்டுதான் மத்திய அரசிடம் நிதி பெற வேண்டுமா, நியாயமாகத் தர வேண்டியதை மத்திய அரசு தானாக ஒதுக்கக் கூடாதா? என்கிற முதல்வரின் கேள்விக்கு உங்கள் எதிர்வினை என்ன?

தமிழகத்துக்கு வரவேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை. நிதியை வழங்க சில விதிமுறைகள் இருக்கின்றன. ஏற்கெனவே பெற்ற நிதியை என்ன செய்தோம் என்று கணக்குக் காட்ட வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் நிதியை மத்திய அரசு முடக்குகிறது என்று சொல்வது விஷமத்தனமான பரப்புரை.

உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைவு என்பதை மறைக்க முடியுமா?

கடந்த 12 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் சாலை திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் ஆகியவற்றுக்கான மானியம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன் ஒப்பிடும்போது எங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவு என்று புதுச்சேரி கூற முடியுமா? திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது இந்தக் கேள்வியை இவர்கள் ஏன் எழுப்பவில்லை? இதற்கு அவரிடம் விளக்கம் கேட்டு தெரிந்துகொள்ளட்டும்.

தமிழகத்தில் திமுக, பாஜக, காங்கிரஸ் ரகசிய உடன்பாட்டுடன் செயல்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாரே?

இதற்கு திமுகவும் காங்கிரஸýம்தான் பதில் சொல்ல வேண்டும். மம்தா பானர்ஜி அவர்களது "இண்டி' கூட்டணியில் இடம் பெறுபவர்.

குஜராத் பேரவைத் தேர்தலின்போது ரேவடி (இலவச) கலாசாரத்துக்கு எதிராக பிரதமர் மோடி கடுமையாகப் பிரசாரம் செய்தார். பின்னர் வந்த தேர்தல்களில் இலவச திட்டங்களில் பாஜகவும் சமரசம் செய்துவிட்டதே?

இலவசத்துக்கும், நலத்திட்டங்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. மகளிர் வங்கிக் கணக்கில் பணம் போகும்போது அது அவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. குழந்தைகள் புரதச்சத்து உணவு சாப்பிட அந்தப்பணம் உதவும். அந்த பணம் வீணாகாது. புதுச்சேரியில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண் வாங்கினால் இ-ஸ்கூட்டர் வழங்கப்படும், விநாயகர்சதுர்த்தி, தீபாவளிக்கு ஒரு சிலிண்டர் இலவசமாக கூடுதலாக வழங்கப்படும் உள்ளிட்ட ஆக்கபூர்வ வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதேபோல, கேரளத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோர், பரம ஏழைகள் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட ஏற்புடைய வாக்குறுதிகளைத்தான் பாஜக அளித்தது.

பிகாரில் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, மகளிருக்கு ரூ.10,000 தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியதை முன்னுதாரணமாக வைத்துதானே, தமிழகத்தில் மகளிருக்கு ரூ.5,000 திமுக அரசு வழங்கியுள்ளது?

ரூ.5,000 வழங்கியது தவறில்லை. 28 மாதங்கள் வழங்காமல் இருந்ததைத்தான் கேள்வி கேட்கிறோம். கோடை காலத்தில் சிறப்பு நிதி வழங்குவது தவறில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் வரும் கோடை காலத்துக்கு மட்டும் நிதி வழங்குவதைத்தான் கேள்வி கேட்கிறோம்.

பொதுவாக இலவசங்கள், உரிமைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்த உங்கள் கருத்து என்ன?

நியாயமாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் வருதற்கு பதில் ரூ.1,000 கோடிதான் குவாரிகள் மூலம் நிதி வருகிறது. இதில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. இதுபோலத்தான் பல துறைகளிலும் வரவேண்டிய வருவாய், திமுகவால் மடை மாற்றம் செய்யப்படுகிறது. வருவாயைப் பெருக்காமல் செலவுகளை அதிகரித்துபற்றாக்குறை பட்ஜெட் போடப்படுவதால் எதிர்காலத்தில் தமிழகம் பாதிக்கப்படும். இலவசங்களோ, மானியங்களோ கூடாது என்பதல்ல எங்கள் கருத்து. அது தகுதியானவர்களைப் போய்ச் சேரவேண்டும். அதற்கு ஏற்ப அரசின் நிதி ஆதாரத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஊழல், மடைமாற்றம் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

தமிழக பேரவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறதே?

எத்தனை முனைகளாக இருந்தாலும் தேர்தல் நெருங்கும்போது இருமுனையாக மாறும். யாரைஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்பதை மையமாக வைத்து, வாக்காளர்கள் இறுதியாக நகர்ந்துவிடுவார்கள். எனவே, எங்கள் அணி முதல் அணியாக மாறும். நடைபெற இருக்கும் தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

திமுக எதிர்ப்பு மூன்றாவது அணியான தவெகவுக்கு சாதகமாக மாறாதா?

அரசியலுக்கு விஜய் புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை மேலும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கிளைச் செயலர் முதல் இரண்டாம்கட்டத் தலைவர்கள் வரை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடித் தொடர்பு உண்டு. ஆனால், விஜய்க்கு அதுபோன்ற தொடர்பு கிடையாது. இளம் வாக்காளர்களிடம் விஜய் தாக்கம் ஏற்படுத்தலாம். ஆனால், தனது செல்வாக்கை வாக்குகளாக மாற்ற முடியாது.

விஜய்யால் யார் வாக்குகளுக்கு சேதாரம் இருக்கும்?

எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி கிடையாது. தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கும். விஜய்யால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை. அதேநேரத்தில், தலித், சிறுபான்மையினர் திமுகவுக்குதொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். அந்த வாக்குகளில் விஜய் சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 11 சதவீதம் பெற்ற நிலையில் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போதுமானதா?

கூட்டணி சேரும்போதே ஏதோ ஒரு நோக்கத்துக்காகத்தான் சேருகிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம். கூட்டணிக்குச்செல்லும்போது விரும்பும் தொகுதிகள், கேட்கும் தொகுதிகள் கிடைக்காது. கிடைத்த தொகுதிகளில் அதிக வெற்றியைப்பெற போராட வேண்டும். இந்தத்தேர்தலில் பாஜக சரித்திர வெற்றியைப்பதிவு செய்யும். தொகுதி அதிகம், குறைவு என்பதை இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை.

பேரனைவத் தேர்தலில் போட்டியிடாதது உங்களது சொந்த முடிவா அல்லது கட்சித் தலைமை எடுத்த முடிவா?

கட்சி ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு பொறுப்பை அளிக்கும். எனக்கு, புதுச்சேரி, கேரளத்தில் பிரசாரத்தில் ஈடுபட கட்டளையிட்டது. அதை ச்செய்தேன்.பாஜகவில் விருப்ப மனுக்களை யாரிடமும் பெறுவதில்லை. நான் போட்டியிட கேட்கவில்லை. தலைமை சொல்வதைச்செய்கிறேன்.

கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறாரே?

செந்தில் பாலாஜியின் வீழ்ச்சி கோவை தெற்கில் இருந்துதான் தொடங்கப்போகிறது. தேர்தல் முடிவு வரும்போது இதை பார்க்க போகிறீர்கள்.

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாரே?

பொய் சொல்வதே முதல்வர் ஸ்டாலினுக்கு வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் வந்த கடிதத்தை, இரண்டு நாள்களுக்கு முன்பு வந்ததை போல அவர் சொன்னது முதல் பொய். இரண்டாவது பொய், நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அந்த கடிதத்தில் எழுதியதாக சொன்னது. நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் எங்குமே குறிப்பிடவில்லை.

பிறகு எதனால் இந்தப் பிரச்னை எழுந்தது?

ஊட்டச்சத்து பாதுகாப்பு, தற்சார்பு மற்றும் நிலையான வேளாண்மை உள்ளிட்ட தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் தங்களது ஊக்கத்தொகை கொள்கையை மாற்றி அமைக்கக் கோரியே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. இப்படியெல்லாம் திரித்துப் பேசுவது என்பது திமுகவுக்கும் அதன் தலைமைக்கும் கைவந்த கலை. புதிதொன்றுமல்ல.

சமூக ஊடக விளம்பரங்கள் பரப்புரைகளின் அடிப்படையில் பார்த்தால் திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறதே.. அது குறித்த உங்கள் பார்வைதான் என்ன?"

சுய விளம்பரத்தாலும், பொய் பரப்புரைகளாலும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? தங்களது தோல்விகளையும், பலவீனங்களையும் மறைப்பதற்காகப் பொய்யான பிம்பங்களைக் கட்டமைப்பதில் அவர்கள் எப்போதுமே சமர்த்தர்கள். பொய் பிரச்சாரமும், அளவுக்கதிகமான விளம்பரமும் முகச்சுழிப்பை ஏற்படுத்துமே தவிர ஆதரவை அதிகரிக்காது. அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் தோல்வியில்தான் முடியும் என்பதைத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இதற்கு முன்னால் பல தேர்தல்களும் உணர்த்தி இருக்கின்றன . இந்த முறை திமுக அதை சந்திக்கப் போகிறது.

- நேர்காணல்: பீ.ஜெபலின் ஜான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.