செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

தேர்தல் வெற்றியும் தோல்வியும்...

இந்தத் தேர்தலில் பணத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. இன்னும் கொஞ்சம் முன்னேறி பணமே இல்லாத தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

News image

தேர்தல் வெற்றியும் தோல்வியும் - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவதும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது. முதல் மாற்றம் 1957-இல் நடந்தது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வர் ஆனார். இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு மற்றும் உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு அது.

கிறிஸ்தவ அமைப்புகளும் நாயர் சர்வீஸ் சொசைட்டி, எஸ்.என்.டி.பி. உள்ளிட்ட ஜாதி அமைப்புகளும் முன்னெடுத்த போராட்டம் காரணமாக பண்டித நேரு அரசு அந்த கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைத்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் இந்திரா காந்தி.

20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி தொடங்கியது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1967 தேர்தல் என்பது "ஒரு அரசியல் சுனாமி' என்று சொல்லலாம். மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் 7 பேர், மாநில அமைச்சர்கள் 8 பேர் எனப் போட்டியிட்ட 15 பேரில் 14 பேர் தோல்வி கண்டனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவருடைய சொந்த ஊரான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்டார். அதற்குப் பிறகு, இப்போது 2026-இல்தான் 15 அமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

1967 சட்டப்பேரவைத் தேர்தலில் 137 இடங்களில் வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 25 இடங்களிலும் வெற்றி பெற்றது. இது உலக சாதனை என்று இராஜாஜி கொண்டாடினார். முதல்வரானவுடன் இராஜாஜி, பக்தவத்சலம், பெரியார் ஈ.வெ.ரா., காமராஜர் என்று எல்லோரையும் சந்தித்து எனக்கு உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள் என்று கேட்ட அரசியல் நாகரிகம் தெரிந்த தலைவர் அறிஞர் அண்ணா.

யேல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிய போது மாணவர்கள் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது யோசிக்காமல், "நீண்ட நாள் ஆட்சியில் இருந்ததால்' என்று எதார்த்தமான பதிலை சொன்னார் அறிஞர் அண்ணா.

1967 தேர்தல் வெற்றியைக் கூட அவர் தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. இந்த வெற்றிக்குக் காரணம் எம்ஜிஆர்; அவரைப் பாராட்டுங்கள் என்று பாராட்டுகளைக் கூட வேண்டாம் என்று சொன்னவர் அவர்.

திராவிடக் கட்சிகள் மக்களைத் தேடித் தேடிச் சென்று அரவணைத்துக் கொண்டதுதான் அவர்கள் வெற்றியின் ரகசியம். தேர்தல் தோல்விகள் திராவிடக் கட்சிகளை என்றும் பாதிக்காது. தேர்தல் அரசியல், மக்கள் உரிமைக்கான குரல் இரண்டும் வேறு வேறு என்ற தெளிவான சிந்தனை உடையவர்கள் திராவிடத் தலைவர்கள். அன்றும் சரி, இன்றும் சரி தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதில் அவர்கள் பின்வாங்கமாட்டார்கள் என்பதுதான் வரலாறு.

1977-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம்ஜிஆர் முதல்வரானார். மொழி, அரசியல், பொருளாதாரம், விவசாயம் எல்லாவற்றுக்கும் இதுதான் என் கொள்கை, என் திட்டம், என் செயல்பாடு என்று சொல்லி "அண்ணாயிசம்' என்பது இதுதான் என்று விளக்கினார் எம்ஜிஆர். மூன்று முறை முதல்வரானார். அவர்தான் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள்.

அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தொலைவில்தான் இருந்தார். கருத்துச் சுதந்திரத்தை மதித்தார். விமர்சனங்களை வரவேற்றார். தவறுகளைச் சுட்டிக் காட்டியபோது அதைத் திருத்திக் கொள்ள அவர் தயங்கியது கிடையாது. அவர் மாற்றுக் கட்சித் தலைவர்களை மதித்தார். அதனால்தான் அவர் மக்கள் தலைவர்.

தேர்தல் பரப்புரையின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் 1967 மற்றும் 1977 சாதனை நிகழும் என்று சொன்னார். 1967, 1977 தேர்தல் ஒப்பீடு என்பது ஏற்புடையதல்ல.

அப்போது வாக்களிப்பதற்கான வயது 21. இப்போது 18-ஆகக் குறைந்து விட்டது. இப்போது இருப்பதுபோல் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் காலத்தில் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் இல்லை. அறிஞர் அண்ணாவும் சரி, எம்ஜிஆரும் சரி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்கள்.

எம்ஜிஆர் தன்னை முன்னிறுத்தி மக்களிடம் வாக்குக் கேட்டார். ஆனால், விஜய் எம்ஜிஆர் ரசிகர் என்று சொல்லி வாக்கு கேட்டார். இது தவிர அறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வெ.ரா., காமராஜர் இவர்களை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டார். எம்ஜிஆர் எந்த இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் சத்துணவுத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினார்.

இப்போதுகூட எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வெ.ரா. என்று திராவிடத் தலைவர்களை முன்னிறுத்திதான் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசாரம் செய்தது. எனவே, தமிழ்நாட்டில் திராவிட அரசியல் என்பது அது அண்ணா விதைத்த விதை. இன்று ஆலமரம் போல் வளர்ந்திருக்கிறது.

தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்போது அல்லது மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகளில் இருந்தோ, பொறுப்புகளில் இருந்தோ விலகும்போது அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை தேர்தெடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதை எம்ஜிஆர் "ரைட் டூ ரீகால்' என்று அழைத்தார். அதற்கு வழிவகை செய்யத் தக்க வகையில் அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் தேவை என்று அன்றே குறிப்பிட்டார். அன்று அவர் சொன்னது இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் அவசியம் என்றுதான் தெரிகிறது. இந்த உரிமை கனடா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், தைவான், உக்ரைன் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது.

இப்போது மத்திய அரசிடம் நிதி உதவி என்பதை மாநிலங்கள் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. மாநிலங்கள் தங்கள் நிதி வருவாயை அதிகரித்துக் கொள்ள என்ன வழி என்று யோசிக்க வேண்டும். எல்லா மாநிலங்களும் தமிழகம் உள்பட நிதி நெருக்கடியை கடன் வாங்கித்தான் சமாளிக்கிறார்கள். இதுவும் சரியான அணுகுமுறை அல்ல.

இதற்குக் காரணம் நிறைய இலவச அறிவிப்புகள் என்று சொல்லப்படுகிறது. அதில் எது தேவை, எது தேவையில்லை என்பதைப் புதிய அரசு ஆராய்ந்து தமிழகத்தின் நிதி நெருக்கடியைக் குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும்.

மாநிலங்கள் எல்லாவற்றையும் போராடித்தான் பெற வேண்டும் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு.கருணாநிதி, எம்ஜிஆர் காலத்திலிருந்து இன்றைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய ஆட்சியாளர்கள் மக்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்களுக்கு முழுச் செயல் வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆட்சியாளர்களுக்கு உண்டு. இழப்புகளைத் தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

விவசாயப் பெருக்கம் என்பது உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்டு இருக்கவேண்டும். இதற்கு உபரி நீரைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். கோதாவரியில் வெள்ளப் பெருக்கின்போது ஒவ்வொரு முறையும் 3,000 டிஎம்சி தண்ணீர் கடலுக்குச் சென்று வீணாகிறது. அந்தத் தண்ணீரை தடுத்துப் பாதுகாத்தாலே தென் மாநிலங்களின் தண்ணீர் தட்டுப்பாடு தீரும்.

இதேபோல், காவிரியில் வெள்ளத்தால் உபரி நீர் கடலில் கலக்கிறது. அரசு இதைத் தடுத்து பாலாறு, செய்யாறு மற்றும் பெண்ணையாறு போன்ற ஆறுகளுக்குத் திருப்பிவிட்டாலே நமது மாநிலத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடே இருக்காது. தொழில் உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இப்படி நிரந்தரத் தீர்வு காணும் திட்டங்களை நிறைவேற்றுவது நல்லது.

வளர்ந்த நாடுகளில் தேர்தல் என்பதை கால்பந்து போட்டிக்கு ஒப்பிட்டுப் பேசுவார்கள். இந்த முறை நீ வெற்றி பெற்றாய்; அடுத்த முறை நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன்தான் தேர்தல் முடிவுகளை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதே மனநிலை இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வர வேண்டும்.

எதிர்க்கட்சி என்பதால் அரசியலுக்காக விமர்சனம் செய்யாமல் ஆளுங்கட்சியின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு ஆதரவும், வரவேற்பும் தரவேண்டும். இதில் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. வளர்ந்த நாடுகளைப்போல் உயர் கல்வியை அனைவருக்கும் தரவேண்டும்.

கட்சிக்காக இல்லாமல் மக்களுக்காக அரசு நடக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும்.

அரசு அலுவலகங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து பொதுமக்களிடம் எதையும் எதிர்பாராமல் அரசு ஊழியர்கள் தனது கடமையைச் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் பணத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. இன்னும் கொஞ்சம் முன்னேறி பணமே இல்லாத தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.