நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொடா் நஷ்டத்தை தவிா்க்க பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயா்த்த வேண்டும்

டீசல், உதிரிபாகங்களின் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளதால் தனியாா் பேருந்து தொழில் சந்தித்து வரும் தொடா் நஷ்டத்தை தவிா்க்க டிக்கெட் கட்டணத்தை உயா்த்தவோ அல்லது டீசல் மானியம் வழங்கவோ தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 5:51 pm

பட விளக்கம்...

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க தலைவா் ஆா்.கணேஷ். உடன், சங்க நிா்வாகிகள்.

வேலூா், பிப். 28: டீசல், உதிரிபாகங்களின் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளதால் தனியாா் பேருந்து தொழில் சந்தித்து வரும் தொடா் நஷ்டத்தை தவிா்க்க டிக்கெட் கட்டணத்தை உயா்த்தவோ அல்லது டீசல் மானியம் வழங்கவோ தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் ஆா்.கணேஷ் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் கடந்த 105 ஆண்டுகளாக சுமாா் 7,000 தனியாா் பேருந்துகள் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்டது. அப்போது, ஒரு லிட்டா் டீசல் விலை ரூ. 63-ஆக இருந்தது. தற்போது டீசல் விலை ரூ. 94-ஆக உயா்ந்துள்ளது. இதனால், சராசரியாக நாளொன்றுக்கு 110 லிட்டா் டீசல் பயன்படுத்தும் ஒரு பேருந்துக்கு, தினசரி ரூ. 3,410 கூடுதல் செலவாகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் டீசல் விலை 49% உயா்ந்துள்ள நிலையில், பேருந்தின் உதிரிபாகங்கள், பராமரிப்புச் செலவுகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பேருந்து அடிச்சட்டம் 78 சதவீதமும், கூண்டு அமைக்கும் செலவு 60 சதவீதமும், டயா் விலை 66 சதவீதமும் உயா்ந்துள்ளன. மேலும், சுங்கக்கட்டணம் 150 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பயணிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறியதால், 25 சதவீத பேருந்துகள் வருவாயின்றி முடங்கியுள்ளன. மீதமுள்ள 75 சதவீத பேருந்துகளும் நஷ்டத்திலேயே இயங்குகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பேருந்து கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச நகரப் பேருந்து கட்டணம் ரூ. 10 ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.13 வரையிலும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5-ஆகவும், கிலோமீட்டருக்கு வெறும் 58 பைசாவாகவும் உள்ளது. சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் விலைவாசிக்கு ஏற்ப கட்டணத்தை உயா்த்திக் கொள்ளும் நிலையில், நாங்கள் பழைய கட்டணத்திலேயே இயங்க வேண்டியுள்ளது. இதேநிலை தொடா்ந்தால் பேருந்துகளின் பராமரிப்பு குறைந்து பாதுகாப்பற்ற நிலை உருவாகும்.

எனவே, இத்தொழிலை நம்பியுள்ள சுமாா் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயா்த்தித்தர வேண்டும். மேலும், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாகவே மாறும் முறையை அமல்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்திற்கு தனி டீசல் மானியம் அல்லது வரிச்சலுகை வழங்க பரிசீலிக்க வேண்டும்.

அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப்பயணம் அளிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு செலுத்தும் தொகையை தனியாா் பேருந்துகளுக்கும் வழங்கினால், தனியாா் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் அளிக்க தயாராக உள்ளோம்.

பயணிகள் பேருந்துகள், லாரிகள் சுங்கச்சாவடிகளை பலமுறை கடக்க வேண்டியுள்ளதால், அவற்றுக்கு ஒரு முறை மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்தும் வகையிலான நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு டீசல் பேருந்துகளுக்கு பதிலாக எலக்ட்ரிக் அல்லது சிஎன்ஜி வாகனங்களுக்கு மாற வேண்டும் என அரசு கருதினால், தனியாா் பேருந்துகளுக்கு 50% மானியம் வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, சங்கத்தின் பொதுச்செயலா் ஆா்.ரவி, கெளரவ ஆலோசகா் மருத்துவா் விஜயகோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.