30.1.1976: பஸ் கட்டணம் உயரலாம்

பஸ் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பது பற்றி...
30.1.1976
30.1.1976
Updated on
2 min read

சென்னை, ஜன. 29 - மாநிலத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.

மாற்றியமைக்கப்பட்ட பஸ் கட்டண விகிதத்தைக் காட்டும் நகல் தாக்கீதுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை மற்றும் யோசனைகள் ஏதேனும் இருந்தால் அதை பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாமென்றும் கூறியுள்ளது.

இதன்படி, டவுன் சர்வீசாக ஓடும் பஸ்களுக்கு முதல் ஸ்டேஜூக்கு 20 பைசாவாகவும், பின்னர் வரும் ஸ்டேஜ் ஒவ்வொன்றுக்கும் 5 பைசா வீதமும் கட்டணம் இருக்கும். நகரைச் சுற்றியுள்ள ரூட்டிலிருந்து பிரதான சாலைக்கு இணைக்கப் பயன்படும் ரூட்டுகளில் முதல் ஸ்டேஜூக்கு கட்டணம் 15 பைசாவாக இருக்கும். வர்த்தக கண்காட்சிகள், திருவிழாக்கள் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு விடப்பாடும் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு கட்டணம் 6 பைசாவாகும்.

நகலில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரமாவது:- எக்ஸ்பிரஸ் சர்வீஸாக ஓடும் பஸ்களுக்கு சமவெளிச்சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு கட்டணம் 6 பைசா: மலைப்பாதைகளில் கிலோ மீட்டருக்கு 8 பைசா. இவ்வித பஸ்களில் பிரயாணிகளுக்கு உயர்ந்த வகுப்பு இடவசதி இருக்குமானால் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதம் கூடுதலாக வசூலிக்கப்படலாம்.

சாதாரண சர்வீஸாக விடப்படும் பஸ்களில் சமவெளிச் சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்குக் கட்டணம் 5 பைசா. 10 கிலோ மீட்டருக்குக் குறைவான தூரத்திற்கு 50 பைசாவுக்கு மேல் போகாதபடி கட்டணம் வசூலிக்கப்படும். மலைப்பாதையில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 7 பைசா. 6 கிலோ மீட்டருக்குக் குறைவான தூரத்திறகு 45 பைசாவுக்கு அதிகமாகப் போகாதபடி கட்டணம் வசூலிக்கப்படும்.

இவை நகலில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் தான் என்றும். ஆட்சேபனைகள் வந்தால் அவற்றைப் பரிசீலித்த பின்னரே அரசு பஸ் கட்டணத்தை மாற்றியமைக்குமென்றும் அரசு அதிகாரி ஒருவர் தெளிவாக்கினார். கட்டணத்தை உயர்த்துவது பற்றி தற்பொழுது எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றார்.

பிப். 19 (ஆம் தேதி) த.நா. சட்டசபை பட்ஜெட் கூட்டம் ஆரம்பம் - கவர்னர் ஷா உரை நிகழ்த்துவார்

சென்னை, ஜன. 29 - பிப். 19 (ஆம் தேதி) காலை 10 மணிக்கு தமிழ்நாடு அசெம்பிளி மற்றும் மேல்சபைக் கூட்டத்தை கவர்னர் திரு. கே.கே. ஷா கூட்டியிருப்பதாக விசேஷ கெஜட் அறிக்கை கூறுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசெம்பிளியின் ஆயுள் காலம் நீடிக்கப்படுமானால் முறையான பட்ஜெட் நிறைவேற்றப்படும் என்று விஷயமறிந்த வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

பிப். 19 (ஆம் தேதி) காலை 10 மணிக்கு சட்டசபையின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் திரு. கே.கே. ஷா உரை நிகழ்த்துவார்.

இந்த உரைமீது சுமார் ஒரு வார காலம் விவாதிக்கப்படும். பின் 2 அல்லது 3 நாள் இடைவெளிக்குப் பின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி தொடர்பு விண்கூடு, எலெக்ட்ரானிக் டெலிபோன் - 2 ஆண்டுக்குள் இந்தியாவில் ஏற்படும் என மந்திரி தகவல்

ராய்பூர் (ம.பி.), ஜன. 29 - இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியா முற்றிலும் சுதேசியான விண்வெளிக் கூடு ஒன்றை பூமியைச் சுற்றும்படியாக வானில் ஏவும். நாட்டிலுள்ள ரேடியோ, டெலிபோன் மண்டலம் முழுவதையும் இந்த விண்கூடு இயக்கும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் “எலெக்ட்ரானிக் டெலிபோன் அமைப்பு” என்ற அதிநவீன முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இவ்விரண்டு முயற்சிகளும் அமலாவதால் செய்தித் தொடர்பு துறையில் இந்தியா தொழில் வள நாடுகளுக்கு சமமான முன்னேற்றமுள்ளதாகிவிடும் என்று மத்திய செய்தி தொடர்பு இலாகா உதவி மந்திரி திரு. ஜகந்நாத் பஹாஅடியா நேற்றிரவு நிருபர்களிடம் இங்கு கூறினார்.

Summary

30.1.1976: Bus fares may increase in Tamil nadu

30.1.1976
29.1.1976: நகர்ப்புற நில உச்சவரம்பு மசோதா தாக்கல் - 500 முதல் 2000 சதுர மீட்டராக நிர்ணயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com