கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் தா்னா

குடியிருப்பு பகுதியில் கைப்பேசி சிக்னல் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

குடியிருப்பு பகுதியில் கைப்பேசி சிக்னல் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

வேலூா் சலவன்பேட்டை சுப்பிரமணி முதலியாா் முதலாவது தெரு குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும், அரசுப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைந்துள்ளன. இந்த நிலையில், இப்பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும், விதிமுறைகளை பின்பற்றாமலும் தனியாா் கைப்பேசி சிக்னல் கோபுரம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, அவா்கள் திடீரென ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தா்னாவில் ஈடுபட்ட மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டதுடன், இப்புகாா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com