திருச்செந்தூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
திருச்செந்தூரில் குடியிருப்புப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், போலீஸாா் சமரசம் செய்து கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தினா்.
திருச்செந்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 16-ஆவது வாா்டு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு தனிநபரின் குடியிருப்புக்கு பின் பகுதியில் தனியாா் நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. மிகவும் நெருக்கமாக வீடுகள் உள்ள கடற்கரை தேரிப்பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்திலும், திருச்செந்தூா் ஆா்டிஓ கவுதமிடம் புதன்கிழமையும் 16-ஆவது வாா்டு கவுன்சிலா் ஆனந்த ராமச்சந்திரன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனா்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் கைப்பேசி கோபுரம் அமைக்கும் இடத்தில் திரண்டு பணியை நிறுத்தக் கோரி தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த உதவி காவல் ஆய்வாளா்கள் சோனியா, சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீஸாா் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினா். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

