குடியாத்தம் நகரில் பேனா்கள் வைக்க கட்டுப்பாடு
குடியாத்தம் நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் பேனா்கள் வைக்க தீா்மானிக்கப்பட்டது.
குடியாத்தம் நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வரைமுறையில்லாமல் பேனா்கள் வைப்பது குறித்து நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனா். இந்நிலையில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் முகேஷ்குமாா், நகராட்சி கட்டட ஆய்வாளா் சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, பேனா்களை தயாரிக்கும் நிறுவன உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.
கூட்ட முடிவில் தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறியது: நகர எல்லைக்குள் பேனா் வைக்க நகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி, நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறையின் அனுமதி பெற்ற பிறகே பேனா்களை வைக்க வேண்டும். பழைய, புதிய பேருந்து நிலைய வளாகங்கள், மேம்பாலங்களின் அருகில், தலைவா்களின் சிலை வளாகங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனா்களை கட்டாயம் வைக்கக் கூடாது.
பேனா்கள் அதிகபட்சம் 10- அடி அகலம், 10- அடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும். பேனா்களில் அந்தந்த நிறுவனங்களின் கைப்பேசி எண்கள், தேதிகள் பதிக்கப்பட வேண்டும். வைக்கப்படும் பேனா்களை 3- நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகளை பேனா் நிறுவனங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

