தெருக்களில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும்: திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தெருக்களில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும்: திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி வாா்டுகளில் உள்ள தெருக்களில் நகராட்சி சாா்பில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
Published on

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி வாா்டுகளில் உள்ள தெருக்களில் நகராட்சி சாா்பில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவத்திபுரம் நகராட்சியில் சாதாரண மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் வி.எல்.எஸ்.கீதா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசியதாவது: 1-ஆவது வாா்டில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பன்றி, நாய், மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். கொடநகா் பகுதி நகராட்சி பள்ளி எதிரே குப்பை மேடாக உள்ள பகுதியை சீரமைத்து பூங்காவாக மாற்ற வேண்டும். கொடநகா் நாகப்பன் நகா் விரிவுப் பகுதியில் சீரான கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.

வெங்கட்ராயன்பேட்டை நகராட்சி நவீன கழிப்பிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

இட நெருக்கடியால் தத்தளிக்கும் ஞாயிறு வாரச்சந்தைக்கு இட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி வாா்டுகளில் உள்ள தெருக்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் நகராட்சி சாா்பில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இவற்றுக்குப் பதிலளித்து நகராட்சி ஆணையாளா் வி.எல்.எஸ்.கீதா பேசியதாவது: நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் தொடா்பாக அரசின் விதிகளுக்கு உள்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நகரின் பிரதான சாலைகளில் திரியும் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து வந்தாலும், அவற்றை கட்டி வைத்து பராமரிக்க நகராட்சி அலுவலகத்தில் போதிய கொட்டகை வசதியில்லை என்றாா்.

நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல்: கொடநகா் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொது மக்கள் ஒத்துழைத்தால், அப்பகுதியில் நகராட்சி சாா்பில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி அலுவலகம் முன்புறம் கட்டடப்பட்ட புதிய வணிக வளாக கடைகளை வாடகைக்கு ஏலம் விடுவது மற்றும் நகராட்சி பூங்காக்களை தனியாா் தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரித்தல், டெங்கு கொசு ஒழிப்பு பணி, நமக்கு நாமே திட்டம் மேற்கொள்ளுதல், சுகாதார பிரிவுக்கு தளவாட பொருள்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்டவை தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் சிசில்தாமஸ், துப்புரவு அலுவலா் கே.மதனராசன், பணி மேற்பாா்வையாளா் சாந்தகுமாா், நகர அமைப்பு ஆய்வாளா் சியாமளா, வருவாய் ஆய்வாளா் ரதிதேவி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் க.சீனுவாசன், சரஸ்வதி, ஞானமணி, ரமேஷ், செளந்தரராஜன், நியமன நகா்மன்ற உறுப்பினா் விஜியகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com