பொதுமக்களிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி.
பொதுமக்களிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி.

கொணவட்டம் அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

கொணவட்டம் அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
Published on

கொணவட்டம் அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் 342 கோரிக்கை மனுக்களை அளித்தனா். அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கொணவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு அளித்த மனு: கொணவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சுமாா் 250 மாணவா்கள் படித்து வருகின்றனா். இதில் 3 கட்டடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு அமா்ந்து படித்து வருகின்றனா். எனவே, கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் அளித்த மனு: கொணவட்டம் பெங்களூா் சாலையின் மத்தியில் தடுப்புசுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம், சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதும், சில இடங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதும் நடந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் தடுப்பு கம்பிகளுடன் கூடிய நடைபாதை அமைக்க வேண்டும்.

பள்ளிக்குப்பம் ஊராட்சி புத்தா் நகரைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளில் வீடுகட்டி நிரந்தரமாக வசித்து வருகிறோம். தற்போது நாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். எங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

தமிழ்நாடு ஜனநாயக பொதுத்தொழிலாளா்கள் சங்கம் அளித்த மனு: சலவன்பேட்டையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் விதிகளை பின்பற்றாமல் சட்டத்துக்கு புறம்பாக கைப்பேசி சிக்னல் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதை உடனே தடுக்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, தனித்துணை ஆட்சியா் மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com