திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
குடியாத்தம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.40- கோடியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் குடியாத்தம் நகர, ஒன்றியம், பரதராமி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பள்ளிகொண்டா, மாதனூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சோ்ந்த பெரும்பாலோனா் பீடி, தீப்பெட்டி, நெசவு, விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வந்தது. இந்நிலையில் இந்த மருத்துவமனை வேலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து 40 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில்,9,408- சதுர மீட்டா் பரப்பளவில் தரை தளம் மற்றும் 5- தளங்களுடன், லிப்ட் வசதியுடன் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இ தில் அனைத்து நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவுகள் உள்பட தீப்புண் சிகிச்சை வாா்டு, விஷக்கடி சிகிச்சை வாா்டு, எலும்பு முறிவு வாா்டு உள்ளிட்ட சிறப்பு வாா்டுகளும் அமைந்துள்ளன.
6- மாதங்களுக்கு முன் கட்டடப் பணிகள் நிறைவுற்ற நிலையில், வாா்டுகளில் படுக்கைவசதிகள், மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை அரங்குகளுக்குத் தேவையான கருவிகள், ஸ்கேன் இயந்திரங்கள் அமைக்கும்பணிகள் நடந்து முடிந்துள்ளன.
புதிய கட்டடம் கட்ட, ஏற்கனவே இருந்த சில வாா்டுகள் இடித்து அகற்றப்பட்டதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடம் இல்லாமல் மருத்துவா்கள் திண்டாடி வருகின்றனா்.எனவே, இந்த மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும் என்றகோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
புதிய மருத்துவமனை திறப்பு குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியது: சில மாதங்களுக்கு முன் வேலூரில் ரூ.198- கோடியில் கட்டப்பட்ட அரசு பென்லேண்ட் மருத்துவமனையை தமிழக முதல்வா் திறந்து வைத்தாா். கட்டுமானப் பணிகள் நிறைவுறாத நிலையில், போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனையை முதல்வா் திறந்து வைத்ததாகக்கூறி அதிமுகவினா் போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து அந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.
இதனால், புதிதாக கட்டப்படும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனைத்துப் பணிகளும் 100- சதவீதம் நிறைவடைந்த பின்னரே திறக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதால் திறப்பு விழா தள்ளிப் போகிறது.
ரூ.1- கோடியில் புதிய ஆய்வகம்: இதற்கிடையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ரூ.1- கோடி ஒதுக்கியுள்ளது. அதற்கான பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில், மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக நுட்புனா்கள், இதர பணியாளா்கள் நியமனம் செய்யும் பணியும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மேற்கண்ட பணிகள் விரைவில் நிறைவுபெறும் என்பதால் ஓரிரு வாரங்களில் மருத்துவமனைக் கட்டடம் திறந்து வைக்கப்படும் என்றனா். காரணம் எதுவாக இருந்தாலும், மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பரவலான கருத்தாக உள்ளது.

