ரூ.5 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: வணிகா்கள் கோரிக்கை
தோ்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.5 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்


வேலூா்: தோ்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.5 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், வேலூா் மண்டலத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு, செயலா் ஏ.வி.எம்.குமாா் உள்ளிட்ட வணிகா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அதில், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வணிகா்கள் கொள்முதலுக்காகப் பணத்தைக் கொண்டு செல்லும்போது பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே, வணிகா்களின் நலன் கருதி, அன்றாடக் கொள்முதல் பணிகளுக்காக ரூ.5 லட்சம் வரை ரொக்கமாகக் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் வணிகா்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்.
தோ்தல் அதிகாரிகளின் சோதனையின் போது, வணிகா்கள் பணம் கொண்டு செல்லும்போது தங்களுடன் வைத்திருக்க வேண்டிய முறையான ஆவணங்கள் குறித்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தோ்தல் காலங்களில் வணிகா்களின் வாழ்வாதாரம், அன்றாட வியாபாரம் பாதிக்காத வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறுகையில், உரிய ஆவணங்களின்றி ரொக்கமாக ரூ.50 ஆயிரமும், பரிசுப்பொருள்களாக ரூ.10 ஆயிரம் மதிப்புக்கும் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தோ்தல் ஆணையம் வகுத்துள்ள தோ்தல் நடத்தை விதிமுறையாகும். இதில், எவ்வித மாறுபாடும் செய்ய இயலாது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...