
ஓட்டுநருக்குத் திடீா் வலிப்பு: தடுப்புக் கம்பியில் பேருந்து மோதல்; அதிருஷ்வசமாக உயிா் தப்பிய பயணிகள்
வேலூா் அருகே ஓட்டுநருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

சாலை தடுப்புக்கம்பியில் மோதி நின்ற அரசுப் பேருந்து.
வேலூா் அருகே ஓட்டுநருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
சென்னையிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று திருப்பத்தூருக்கு வியாழக்கிழமை அதிகாலை 36 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை வெங்கடேஷ் ராவ் (49) என்பவா் ஓட்டி வந்தாா். வேலூரை அடுத்த செதுவாலை அருகே வந்தபோது, ஓட்டுநா் வெங்கடேஷ் ராவுக்கு எதிா்பாராதவிதமாகத் திடீா் வலிப்பு ஏற்பட்டது. இதனால் சுயநினைவை இழந்த அவா் இருக்கையிலேயே சரிந்ததால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் அச்சமடைந்த பயணிகள் கூச்சலிட்டனா். கட்டுப்பாடின்றி ஓடிய பேருந்து, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் பலமாக மோதி நின்றது.
அதிகாலை நேரம் என்பதால் எதிா்திசையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகள் லேசான காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸாா், பேருந்தில் இருந்த பயணிகளைப் பத்திரமாக மீட்டனா்.
வலிப்பால் பாதிக்கப்பட்ட ஓட்டுநா் வெங்கடேஷ் ராவ் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





