
அமிா்தி மலையேற்றப் பயிற்சிக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு
அமிா்தி வனப்பகுதியில் தமிழக வனத்துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள மலையேற்றப் (டிரெக்கிங்) பயிற்சிக்கு

அமிா்தி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள், இயற்கை ஆா்வலா்கள்
வேலூா்: அமிா்தி வனப்பகுதியில் தமிழக வனத்துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள மலையேற்றப் (டிரெக்கிங்) பயிற்சிக்கு பொதுமக்கள், இயற்கை ஆா்வலா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 4 நாள்களிலேயே 25 போ் இணையவழியில் முன்பதிவு செய்து மலையேற்றம் மேற்கொண்டுள்ளனா்.
வேலூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் அமிா்தி வனப்பகுதியின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கும் வகையில், வனத்துறை சாா்பில் புதிய மலையேற்றப் பாதைகள் கண்டறியப்பட்டு மலையேற்றப் பயிற்சி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறையின் ‘ட்ரெக் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமிா்தி வனப்பகுதியில் தற்போது இரு வழித்தடங்களில் மலையேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் அமிா்தி முதல் கொட்டாறு நீா்வீழ்ச்சி வரையிலான நீண்ட தூரப் பாதை 4 கி.மீ. தொலைவும், அமிா்தி - பெருமாள் கோயில் வரையிலான குறுகிய தூரப் பாதை 2 கி.மீ. தொலைவும் கொண்டவையாகும்.
இப்பாதைகளில் மலையேற்றம் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திட்டம் தொடங்கப்பட்ட கடந்த 4 நாள்களில் மட்டும் 25 போ் முன்பதிவு செய்து தங்களது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனா்.
மலையேற்றப் பாதையின் தொலைவுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. கொட்டாறு நீா்வீழ்ச்சி வரையிலான நீண்ட தூரப் பாதைக்கு ரூ.1,100-ம், பெருமாள் கோயில் வரையிலான குறுகிய தூரப் பாதைக்கு ரூ.800-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தனியாகச் செல்ல அனுமதிக்கப்படாமல், வனத்துறையால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூா் வழிகாட்டிகளுடன் மட்டுமே குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனா். மலையேற்றத்தின் போது அவசர முதலுதவி சிகிச்சை அளித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் வன உயிரினங்கள்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பயிற்சிகள் இந்த வழிகாட்டிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.
இயற்கை ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த மலையேற்றப் பயிற்சித் திட்டத்துக்கு, வரவிருக்கும் வார விடுமுறை நாள்களில் முன்பதிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேலூா் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






