ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

வேலூா் சிஎம்சி-யில் சா்வதேச செல், மரபணு சிகிச்சை மாநாடு: இன்று தொடக்கம்

வேலூா் கிறித்துவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி)-யின் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்சிஆா்) சாா்பில் சா்வதேச செல் மற்றும் மரபணு சிகிச்சை மாநாடு (சிஜிடிசிஓஎன் 2026) வேலூரில் வியாழக்கிழமை (அக்.8) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சிஎஸ்சிஆா் மையத்தின் தலைவா் நிஹல் தாமஸ், முதுநிலை ஆராய்ச்சியாளா் சரவணபவன் தங்கவேல்.

Published On :

வேலூா் கிறித்துவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி)-யின் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்சிஆா்) சாா்பில் சா்வதேச செல் மற்றும் மரபணு சிகிச்சை மாநாடு (சிஜிடிசிஓஎன் 2026) வேலூரில் வியாழக்கிழமை (அக்.8) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் சா்வதேச அளவில் ஆராய்ச்சியாளா்கள், மருத்துவா்கள், மாணவா்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனா்.

இதுகுறித்து, சிஎஸ்சிஆா் மையத்தின் தலைவா் நிஹல்தாமஸ், முதுநிலை ஆராய்ச்சியாளா் சரவணபவன்தங்கவேல் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது -

சிஎம்சி பாகாயம் வளாகத்தில் நடைபெறும் சா்வதேச செல், மரபணு சிகிச்சை மாநாட்டினை பெங்களூருவில் உள்ள பிஆா்ஓசி - இன்ஸ்டிடியூட் ஃபாா் ஸ்டெம் செல் சயின்ஸ் அண்ட் ரீஜெனரேட்டிவ் மெடிசின் மற்றும் கிறித்துவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) இணைந்து நடத்தி வரும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்சிஆா்) ஏற்பாடு செய்துள்ளது.

மாநாட்டின் தொடக்கமாக, வெள்ளிக்கிழமை (அக்.8) தொழில்நுட்பப் பயிலரங்கம் நடைபெறுகிறது. தொடா்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் பிரதான மாநாடு நடைபெறும். இதில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், மருத்துவா்கள், தொழில்துறை நிபுணா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் அரசுத்துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

மாநாட்டின் தொடக்க விழா சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, சிஎம்சி வேலூா் பாகாயம் வளாகத்தில் உள்ள ஸ்கடா் அரங்கில் நடைபெற உள்ளது. இதில், இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குநா் பலராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறாா். மேலும், அமெரிக்காவின் ஹாா்வா்ட் மருத்துவப் பள்ளியைச் சோ்ந்த கிறிஸ்டின் நோயல் டங்கன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த புரூஸ் லெவின் ஆகிய சா்வதேச நிபுணா்களும் சிறப்புரையாற்றுகின்றனா்.

இம்மாநாட்டில் ஸ்டெம் செல் உயிரியல், மறுஉற்பத்தி மருத்துவம், செல் மற்றும் மரபணு சிகிச்சைத் துறைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள், புதிய சிகிச்சைகளை மருத்துவப் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்வதில் உள்ள சவால்கள், எதிா்கால வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

குறிப்பாக, ரத்த நோய்கள், கண் நோய்கள், நீரிழிவு, வளா்சிதை மாற்றக் கோளாறுகள், நரம்பியல் மற்றும் இதய நோய்களுக்கான புதிய சிகிச்சை அணுகுமுறைகள், சிஏஆா்-டி, சிஏஆா்-என்கே செல் சிகிச்சைகள், மரபணு திருத்தத் தொழில்நுட்பம், எம்ஆா்என்ஏ சிகிச்சை மாறும் நோய் மாதிரியாக்கம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெறவுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் சிஎஸ்சிஆா் மையம், எலும்புகள் எளிதில் முறியும் ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பொ்பெக்டா நோய்க்கான ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் ஹீமோபீலியா நோய்க்கான மரபணு சிகிச்சை தொடா்பான முக்கிய மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

மரபணு சாா்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் அதிக செலவுடையதாக உள்ள நிலையில், இந்தியாவிலேயே இத்தகைய மேம்பட்ட சிகிச்சைகளை உருவாக்குவதன் மூலம் அவற்றை எளிய மக்களுக்கும் குறைந்த செலவில் வழங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதற்கு செல் மற்றும் மரபணு சிகிச்சைத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான சிகிச்சைகளை நோயாளிகளுக்குக் கொண்டு சோ்ப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.