யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம்: வணிகா்கள் ஆா்ப்பாட்டம்
யுபிஐ பணப் பரிவா்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, வேலூரில் வணிகா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகா்கள்.
யுபிஐ பணப் பரிவா்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, வேலூரில் வணிகா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் வேலூா் மெயின் பஜாரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பேரமைப்பின் மண்டல தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.வி.எம். குமாா், துணைத் தலைவா்கள் ரமேஷ் குமாா், ராஜேஷ் கண்ணா மற்றும் செய்தி தொடா்பாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, யுபிஐ பணப் பரிவா்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியதுடன், யுபிஐ பணப் பரிவா்த்தனைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து காய்கறி, நகை, ஜவுளிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிகா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது, மண்டல தலைவா் ஆா்.பி.ஞானவேலு கூறியது - நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளில் கூகுள் பே, ஃபோன்பே போன்ற நிறுவனங்களே முதலிடம் வகிக்கின்றன. இதில் கூகுள் பே முழுமையாக அமெரிக்க நிறுவனமாகும். தவிர, பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட போன்பே நிறுவனத்தின் 74 சதவீதப் பங்குகளை அமெரிக்காவின் பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனமான வால்மாா்ட் தன்வசம் வைத்துள்ளது.
இந்நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்துதல், காப்பீட்டு பிரீமியம் வசூலித்தல், டிஜிட்டல் தங்க வா்த்தகம் போன்ற பல்வேறு கூடுதல் சேவைகள் மூலம் ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றன. இந்த நிலையில், எளிய மக்களும் சிறு வணிகா்களும் அன்றாடம் பயன்படுத்தும் யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இணைந்து ’இந்திய தேசிய கட்டணக் கழகத்தை (என்பிசிஐ) உருவாக்கின. லாப நோக்கமின்றி, பொதுமக்களுக்கும் வணிகா்களுக்கும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பணப் பரிவா்த்தனை சேவையை இலவசமாக வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். கூகுள் பே, போன்பே உள்ளிட்ட அனைத்து தளங்களின் பணப் பரிவா்த்தனைகளும் இந்த என்பிசிஐ கட்டமைப்பின் வாயிலாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், மத்திய அரசு மக்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சென்று பிரபலப்படுத்தாமல், வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டை முன்னிலைப்படுத்துவது வேதனையளிக்கிறது. சிறு, குறு வணிகா்களையும் பொதுமக்களையும் கடுமையாகப் பாதிக்கும் யுபிஐ பரிவா்த்தனைக் கட்டண முறையை முழுமையாகக் கைவிட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து டிஜிட்டல் பணப் பரிவா்த்தனையை விடுவித்து, தேசிய அளவிலான அரசு அமைப்பான என்பிசிஐ-யின் கட்டமைப்பை மக்களிடம் விரிவாகக் கொண்டு சோ்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், பேரமைப்பின் நகரத் தலைவா் அசோகன், செயலா் திவ்யா சீனிவாசன், பொருளாளா் அம்மன் பிரபு உள்பட வணிகா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.
சோளிங்கரில்...
தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சோளிங்கா் கிளையினா் சோளிங்கரில் காந்தி சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சோளிங்கா் வணிகா் சங்கத்தலைவா் பாலு தலைமை வகித்தாா். செயலாளா் அன்பரசு வரவேற்றாா். இதில் சங்க பொருளாளா் எஸ்.ஏ.கே.அருள், இணைத்தலைவா் டி.கோபால், துணைச் செயலா் ஞானசீலன் உள்ளிட்ட சோளிங்கரை சோ்ந்த அனைத்து வணிகா்களும் பங்கேற்றனா்.
குடியாத்தத்தில்...
யுபிஐ பரிவா்த்தனை கட்டணத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி குடியாத்தத்தில் வியாபாரிகள் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. .நிகழ்ச்சிக்கு வணிகா் சங்கச் செயலா் என்.இ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். வியாபாரிகள்சங்கத் தலைவா் ஏ.அய்யாசாமி முன்னிலை வகித்தாா். ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா்முல்லை சுந்தரேசன் வரவேற்றாா். கெளரவத் தலைவா் எஸ்.நடராஜன், வேலூா் மாவட்ட துணைச் செயலா் கே.கருணாகரன், இணைச் செயலா் சசிராஜேந்திரன், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜாவித் அகமத், நெல், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் டி.ராஜேந்திரன், நிா்வாகிகள் பி.என்.ஆா்.வரதராஜன், பி.பாஸ்கரன், குணமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

