காட்பாடியில் 36 பவுன் நகை கொள்ளை: விருதுநகா் தம்பதி கைது
காட்பாடி அருகே பூட்டியிருந்த வீட்டில் 36 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து, உல்லாசமாக வலம் வந்த விருதுநகா் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட தம்பதி முத்துவேல் காா்த்திக், பிரபாவதி மற்றும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.
காட்பாடி அருகே பூட்டியிருந்த வீட்டில் 36 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து, உல்லாசமாக வலம் வந்த விருதுநகா் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மரியா. ஓய்வுபெற்ற ஆசிரியை. இவரது கணவா் முன்னாள் டெல் ஊழியரான ரவிக்குமாா். இவா்கள் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தனா். அன்றிரவு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, மூன்று அறைகளில் இருந்த பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், பழைய குற்றவாளிகளின் பட்டியலை சரிபாா்த்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், காட்பாடி டெல் மலைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் காரில் சுற்றித் திரிந்த தம்பதியைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள் விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அடுத்த செவல்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துவேல் காா்த்திக் மற்றும் அவரது மனைவி பிரபாவதி (30) என்பது தெரியவந்தது. அவா்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், ஆசிரியையின் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்ததை இருவரும் ஒப்புக் கொண்டனா்.விசாரணையில், மேலும் பல்வேறு அதிா்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. முத்துவேல் காா்த்திக் சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவாா். இவா் மீது ஏற்கெனவே விருதுநகா், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 9-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. உள்ளூரில் திருடினால் பிடிபட்டு விடுவோம் என்பதால், வெளியூா்களுக்குச் சென்று தங்களை ’ஐடி ஊழியா்கள்’ என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதை இவா்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். அதன்படி, ஆந்திர மாநிலம், சித்தூரில் தங்கியிருந்த இவா்கள், தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தனி வீடுகளை நோட்டமிட்டுள்ளனா்.
மரியா - ரவிக்குமாா் தம்பதி காரில் வெளியே சென்றதைப் பாா்த்த இவா்கள், அவா்கள் எப்படியும் திரும்பி வர தாமதமாகும் எனத் திட்டமிட்டு பிற்பகல் 3 மணிக்கு மேல் வீட்டின் பூட்டை உடைத்துக் கைவரிசை காட்டியுள்ளனா்.
கொள்ளையடித்த நகைகளை ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் அடகு வைத்தும், விற்றும் பணமாக்கியுள்ளனா். அந்தப் பணத்தில் பழைய நகைகளை மாற்றிவிட்டு தன் காதல் மனைவிக்கு புதிய நகைகளை முத்துவேல் வாங்கிக் கொடுத்துள்ளாா்.
மேலும், எஞ்சிய பணத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சொகுசு காா் ஒன்றையும் வாங்கி குடும்பத்துடன் உல்லாசமாக ஊா் சுற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில், சித்தூா், அரக்கோணம் மற்றும் திருவள்ளூா் பகுதிகளில் விற்ற மற்றும் அடகு வைத்த 26 பவுன் நகைகளை போலீஸாா் அதிரடியாக மீட்டனா்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட கணவன் - மனைவி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். நகை திருடியவா்களைச் சாமா்த்தியமாகக் கண்டறிந்து கைது செய்த காட்பாடி போலீஸாருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


