திருப்பூர் மாநகராட்சி,​​ உள்ளாட்சிகள் திணறல் மீளாத மின் பற்றாக்குறை; தீராத குடிநீர்த் தட்டுப்பாடு!

திருப்பூர், ஏப்.3: திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் கடும் மின்பற்றாக்குறை காரணமாக குடிநீர் விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை காலத்தில் ஆங்காங
Updated on
2 min read

திருப்பூர், ஏப்.3: திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் கடும் மின்பற்றாக்குறை காரணமாக குடிநீர் விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடுமையான மின்தட்டுóப்பாடு காரணமாக திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளுக்கும் முதல், 2வது மற்றும் 3ம் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இதில், மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் முதல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 7 எம்எல்டியும் (10 லட்சம் லிட்டருக்கு ஒரு எம்எல்டி), 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 27 எம்எல்டியும், புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் மூலம் (என்டிஏடிசி எல்) பவானியில் இருந்து வரும் 3வது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 22 எம்எல்டி குடிநீரும் என நாளொன்றுக்கு திருப்பூர் மாநகராட்சிக்கு 56 எம்எல்டி குடிநீர் வர வேண்டும். ஆனால், குடிநீர் பாதையில் ஏற்படும் பழுது காரணமாக நாளொன்றுக்கு 48 எம்எல்டி குடிநீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நிலவும் கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் மாநகராட்சிக்கு 40 எம்எல்டி குடிநீரே வழங்கப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் மின் தடையால் மட்டுமே 200 எம்எல்டிக்கு மேல் குடிநீர் வரத்து பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு, திருப்பூருக்கு வரும் குடிநீர் முதலில் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9 கீழ் நிலைத் தொட்டிகளில் விடப்பட்டு பின்னர் மோட்டார் வைத்து மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

ஆனால், மாநகராட்சி பகுதியில் நிலவும் கடுமையான மின்தடை காரணமாக மோட்டார்களை இயக்கி கீழ்நிலைத் தொட்டிகளில் இருந்து நீரேற்றம் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், மாநகராட்சி பகுதியிலுள்ள 63 ஆயிரம் இணைப்புகளுக்கும் வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகக்குறைந்த அளவிலேயே.

இதையடுத்து, தற்போது அதிகரிக்கும் கோடை வெயிலால் ஆங்காங்கே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதும் தொடர் கதையாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் அருகிலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 ஊராட்சிகளை இணைந்து திருப்பூர் மாநகராட்சியை விரிவுபடுத்தப்பட உள்ளது. அவ்வாறு, மாநகராட்சி விரிவுபடுத்தப்படும் சூழ்நிலையில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 4வது கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ள போதிலும் மின்தடை மற்றும் குடிநீர் பாதையில் ஏற்பட்டுள்ள பழுது, தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி 15வேலம்பாளையம், நல்லூர் உள்ளிட்ட வழியோர ஊராட்சி மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோடை காலத்தில் மின்தடையால் மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி கூறியது:

மாநகராட்சி விரிவுபடுத்தப்பட உள்ளதையொட்டி அமைக்கப்படும் 4வது கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இத்திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ள ரூ.8 கோடியை புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தவிர, தற்போது கோடை காலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்கு மின்தடையும் முக்கிய காரணம் என்பதால் மின்சாரம் இல்லாத நேரத்தில் மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்ய 9 ஜெனரேட்டர் வாங்கப்பட உள்ளது. அதற்காக ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜெனரேட்டர்கள் இணைக்கப்படும் போது மாநகரா ட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு ஓரளவுக்கு தீர்வு ஏற்படுத்த முடியும் என்றார்.

இருப்பினும், மாநகராட்சி தவிர மற்ற ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் மின்தடையால் ஏற்படும் குடிநீர் பாதிப்புகளை தீர்க்க நிதிப்பற்றாக்குறை காரணமாக எவ்வித மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் கோடைகாலத்தில் போதுமான குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com