மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கே பலவீனம்

திருப்பூர், ஜூலை 11: கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:29 am

ந. தமிழ்செல்வன்

திருப்பூர், ஜூலை 11: கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து கோவிந்தசாமி கூறுகையில், "ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அது கட்சிக்கே பலவீனத்தை ஏற்படுத்தும்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1968-ல் திருப்பூரில் சிஐடியூ உறுப்பினராக இணைந்த சி.கோவிந்தசாமி, தொழிற்சங்கத்தில் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

1974-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். தொடர்ந்து அக் கட்சியில் மாவட்டக்குழு, மாநிலக்குழு உறுப்பினர், சட்டப்பேரவைக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தார்.

1986-ல் திருப்பூர் நகராட்சி கவுன்சிலராகவும், 1989-ல் திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் கோவிந்தசாமி பணியாற்றியுள்ளார். 2-வது முறையாக கடந்த 2006-முதல் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

கடந்த 2008-ல் திருப்பூரில் தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் சட்டப் பேரவை குழுத்தலைவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பூர் பேரவை தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாகத் தெரிவித்து ஆகஸ்டு 1-ல் மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி பாராட்டுவிழா நடத்தும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து, கோவிந்தசாமி கூறியதாவது:

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழிலாளர் பிரச்னைகளில் மட்டும் அதிக அளவில் ஈடுபட்டு வந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தை, மக்கள்  இயக்கமாக மாற்றியதில் பெரும் பங்கு எனக்குண்டு. அதன்பிறகே, இக்கட்சியில் ஏராளமான உறுப்பினர்கள் சேரத் துவங்கினர்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பனியன் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகச் சித்தரித்து கட்சியின் மாநிலக்குழு மற்றும் சட்டப்பேரவைக் குழுத்தலைவர் பதவியில் இருந்தும் நீக்கினர்.

அப்போதிருந்தே, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் பலம் குறையத் துவங்கியது.

இந்நிலையில், மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அதனால் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே பெரும் இழப்பு ஏற்படும். இதை கட்சிதான் உணர்ந்து முடிவு செய்யவேண்டும், என்றார் கோவிந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.