இலவசம் கொடுத்த பரவசம்: பழைய மின்மோட்டாருக்கு ​ திடீர் மவுசு!

ஈரோடு, செப். 22: பழைய மின் மோட்டரைப் பயன்படுத்திவரும் விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் புதிதாக இலவச மின்மோட்டர் வழங்கப்பட உள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த பழைய மின்மோட்டார்க
Updated on
1 min read

ஈரோடு, செப். 22: பழைய மின் மோட்டரைப் பயன்படுத்திவரும் விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் புதிதாக இலவச மின்மோட்டர் வழங்கப்பட உள்ளதாகக்

கிடைத்த தகவலையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த பழைய மின்மோட்டார்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மின் மோட்டார்களோடு, மின் கம்பத்தில் இருந்து வரும் வயர்கள், ப்யூஸ் கேரியர்கள், ஸ்டார்ட்டர் மற்றும் மின்மோட்டார்களுக்குச் செல்லும் வயர்கள் உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தில் சேருவதற்காக அந்தந்த மின்வாரிய அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள லைன்மேன்கள் மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் மூலமாக ஆய்வு நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முதற்கட்டமாக பழைய மின்மோட்டார்களை வைத்துள்ள விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் புதிய மின்மோட்டார் வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் கட்டத்திலேயே பயனாளிகளாகச் சேருவதற்கு, பழைய மின்மோட்டார்களை வாங்கிப் பொருத்துவதில் விவசாயிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பழைய இரும்புக் கடைகளில் கேட்பாரற்றுக் கிடந்த பழைய மின்மோட்டார்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.

ரூ. 2 ஆயிரம் வரை விலை உயர்வு

விவசாயிகள் அதிக அளவில் பழைய மின்மோட்டார்களை வாங்கிச் செல்வதால், இவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 3 ஹெச்பி மோட்டார், பம்புடன் ரூ. 3

ஆயிரம் வரையிலும், 5 ஹெச்பி மோட்டார், பம்புடன் ரூ. 5 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. இந்த மோட்டார்களின் விலை தற்போது ரூ. 2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தது:

இலவச மின்மோட்டார் வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

பழைய மின்மோட்டாருக்கு அதிக மின்சாரம் தேவை என்பதால், மின்பற்றாக்குறை ஏற்படுவதைக் கருத்தில் கொண்டுதான் புதிய மின்மோட்டார்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இத்திட்டம் வட்டாரம் வாரியாகச் செயல்படுத்தப்படுமா? அல்லது பழைய மோட்டார்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுமா? என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com