திருப்பூர், ஜூன் 16: பருத்தி நூல் விலை குறைந்து வருவதை அடுத்து கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட பனியன் விலையை குறைக்க வெளி மாநில வர்த்தர்கள் வற்புறுத்துகின்றனர். எனினும், இதர மூலப்பொருட்களின் விலை குறையாததாலும், சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்ட நெருக்கடியாலும் பனியன் விலையை குறைக்க முடியாமல் திருப்பூர் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.
÷கடந்த ஆண்டு வரைமுறையின்றி பஞ்சு, நூல் ஏற்றுமதி செய்யப்பட்டதை அடுத்து உள்நாட்டில் பருத்தி நூல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 2009 அக்டோபர் மாதம் ரூ.146 ஆக இருந்த ஒரு கிலோ 40 நெ பருத்தி நூல் 2010 அக்டோபரில் ரூ.204 ஆக உயர்ந்தது. அதன்தொடர்ச்சியாக, 2011 பிப்ரவரிக்குள் ரூ.275 ஆகவும் விலை உயர்ந்தது.
÷கடுமையாக உயர்ந்த நூல் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலையுயர்வால் ஏற்பட்ட இதர மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக உள்நாட்டு தேவைக்காக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளின் விலை ஒரே ஆண்டில் 27 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள பின்னலாடை வர்த்தகர்களிடையே கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இருப்பினும், நிலைமையைப் புரிய வைத்து இவ்விலையேற்றத்தை உற்பத்தியாளர்கள் ஏற்க வைத்தனர்.
÷இந் நிலையில், தற்போது சர்வதேச அளவில் விளைச்சல் அதிகரித்து, தேவை குறைந்திருப்பதை அடுத்து உள்நாட்டில் பருத்தி நூல் விலை குறைந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் கிலோவுக்கு ரூ.62 வரை குறைந்து கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 40 நெ நூல் விலை ரூ.213க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 20 நெ நூல் ரூ.179.60, 24 நெ நூல் ரூ.187.60, 30 நெ நூல் ரூ.199.60, 34 நெ நூல் ரூ.206.60 ஆகவும்
குறைந்துள்ளது.
÷பருத்தி நூல் விலை பெருமளவில் குறைந்து வருவதையடுத்து கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட பின்னலாடைகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்று வெளிமாநில வர்த்தகர்கள் திருப்பூர் உற்பத்தியாளர்களை வற்புறுத்தி வருகின்றனர். மேலும் சில மாநில வர்த்தகர்கள் சரக்குகள் கொள்முதல் செய்வதையும் பாதியாகக் குறைத்து விலையை குறைக்கும்படி நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
÷எனினும், பருத்தி நூல் விலை குறைந்தபோதும் இதர மூலப்பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டு தொழில் நெருக்கடி அதிகரித்திருப்பதால் உயர்த்தப்பட்ட பின்னலாடைகளின் விலையைக் குறைக்க முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் வெளி மாநில வர்த்த கர்களிடையே பனிப்போர் நீண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
÷இதுகுறித்து 2-ம் நிலை பின்னலாடை உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலர் கே.எஸ்.பாபுஜி கூறுகையில், திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பருத்தி நூல் விலை மற்றும் இதர மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் 27 சதம் வரை பின்னலாடைகளின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது நூல் விலை குறைந்திருப்பதை மட்டும் கருத்தில் கொண்டு வர்த்தகர்கள் பின்னலாடைகளின் விலையைக் குறைக்க வற்புறுத்துகின்றனர்.
÷நடைமுறையில் சாய, சலவை ஆலைகள் மூடலால் பின்னலாடை துணிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி சாயமிட்டுப் பெறுவதால் உற்பத்திச் செலவு இரு மடங்காக உயர்ந்துள்ளது. தவிர, உயர்த்தப்பட்ட இதர மூலப்பொருட்களின் விலையும் குறையவில்லை. அதனால், பின்னலாடைகளின் விலையைக் குறைக்க முடியாததை வெளி மாநில வர்த்தகர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.
÷இதேபோல், வெளிமாநில வர்த்தகர்கள் தெரிவித்து வரும் விலை குறைப்பு கோரிக்கையை அடுத்து அடுத்த வாரத்தில் சங்க உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
÷இதுகுறித்து சங்க தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறுகையில், மூலப்பொருட்கள் விலை, சாய ஆலைகள் மூடலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு பனியன் விலையில் மாற்றம் செய்வது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

